
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பத்து நாட்களாகியும் ஏன் கைது செய்ய முடியவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் நேற்று இடிந்து விழுந்தன. இடிந்த குடியிருப்புகளைப் பார்க்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா திருவொற்றியூருக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “திருவெற்றியூர் மக்களின் துயரில் பங்கேற்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளன. இந்தக் கட்டிடம் என்பது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இங்கு வாழ்ந்த மக்கள் உடைமைகளையும் பொருட்களையும் எடுத்து கொண்டு சாலையில் நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார்கள். இந்த நிலைமைக்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். குடிசைகளே பரவாயில்லை என்று யோசிக்கும் நிலையில்தான் இந்தக் குடியிருப்பு உள்ளது. நல்ல வேலையாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில்தான் தரமான கட்டிடங்கள் இருந்தன. இப்போதைய அரசியல்வாதிகளால் தரமான கட்டிடங்களை கட்ட முடியாதது ஏன்? ஒதுக்கும் நிதியை கட்டிடத்திற்கு செலவு செய்யாமல் ஊழல் செய்வதால்தான் இந்த நிலைமை ஏற்படுகிறது. இந்த மக்களுக்கு இப்போதைய பாதுகாப்பு என்ன? மொத்தக் குடியிருப்பையும் இடித்து விட்டு புது குடியுருப்பு கட்டும் வரை இந்த மக்களை அரசாங்கம் பார்த்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் அதிமுக, திமுகவே காரணம். தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களின்தில் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும். திருவெற்றியூர் மக்களின் வாடகை செலவையும் தமிழக அரசே ஏற்று கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 10 நாட்கள் ஆகியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஸ்காட்லாந்துக்கு இணையாக தமிழக காவல்துறையை ஒப்பிட்டு பேசினாலும் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக உள்ளது. முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிவது ஏன்? ஐந்து ஆண்டுகால ஆட்சி முடிந்த பிறகு மு.க. ஸ்டாலினுக்கு நான் வழங்கும் மதிப்பெண் குறித்து கூறுகிறேன்” என்று பிரேமலதா தெரிவித்தார்.