மனம் மாறிய திமுக அரசு.. தமிழ்ப் புத்தாண்டு இல்லை... தமிழர் திருநாள்.. பொங்கல் பரிசு பையில் மாறிய வாழ்த்து.!

By Asianet TamilFirst Published Dec 28, 2021, 8:16 PM IST
Highlights

தமிழ்ப் புத்தாண்டு தேதி சர்ச்சை மீண்டும் தலைத் தூக்கிய நிலையில் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், இதுபற்றி அரசு தரப்பில் எந்தப் பதிலும் கூறப்படவில்லை. தெளிவுப்படுத்தவும் அரசு முன் வரவில்லை.

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் முன்பு இடம் பெற்றிருந்த ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்’ அகற்றப்பட்டு ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்’ என்று மாற்றப்பட்டுள்ளது. 

முந்தைய திமுக ஆட்சியில் 2008-ஆம் ஆண்டில் தமிழ் தமிழ் புத்தாண்டு சட்டத்தை அன்றைய முதல்வர் மு.கருணாநிதி இயற்றினார். இதன்படி சித்திரை முதல் தேதியில் இருந்து தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என அன்றைய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை அதிமுக எதிர்த்த நிலையில், 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிகு வந்ததும், தமிழ்ப் புத்தாண்டு தேதியை மீண்டும் சித்திரை முதல் தேதிக்கு மாற்றி திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், தமிழ்ப் புத்தாண்டு குறித்த எந்தக் கேள்வியும் எழவில்லை.

 

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தேதியை மீண்டும் மாற்றுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே அதை உறுதிப்படுத்தும் வகையில், வரும் பொங்கல் திருநாளுக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட உள்ள 21 வகையான மளிகை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கும் கைப்பையில், “'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயருடன் இடம் பெற்றிருந்தது. இதனால், இது சர்ச்சையானது. தமிழக அரசு மீண்டும் தை முதல் தேதிக்குப் புத்தாண்டை மாற்றப் போகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டது. 

தமிழ்ப் புத்தாண்டு தேதி சர்ச்சை மீண்டும் தலைத் தூக்கிய நிலையில் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், இதுபற்றி அரசு தரப்பில் எந்தப் பதிலும் கூறப்படவில்லை. தெளிவுப்படுத்தவும் அரசு முன் வரவில்லை. இதற்கிடையே வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் பரிசுப் பையில் இருந்த தமிழ்ப் புத்தாண்டு என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட பொங்கல் பரிசு பை வெளியாகியுள்ளது.

அதில் பையில் இருபுறமும் தமிழக அரசு முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படமும் இடம் பெற்றுள்ளது. அத்துடன்  'தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்' என்ற வாசகமும் ‛மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை கிளம்பிய நிலையில், தமிழக அரசு அதைக் கைவிட்ட்டுள்ளது. தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டு பெயரை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது.

click me!