
என்ன பாவமோ? யார் கொடுத்த சாபமோ தெரியவில்லை...விஜயகாந்த் குடும்ப நிலை இப்படியாகிவிட்டது பாவம். உடல் பிரச்னைகளின் ஒரு முக்கிய நிலையாக விஜயகாந்துக்கு குரல் வளம் சிக்கலாகிப் போனதும், அவரால் எதையும் நினைவில் நிறுத்திக் கோர்வையாக பேச இயலாமல் போனதும் ஊரறியும். கணவரை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு பிரசாரத்துக்கு வந்த பிரேமலதா, எதிர்கட்சியினர் ரேஞ்சுக்கு தன் கூட்டணியின் வி.ஐ.பி.க்கள் பற்றி உளறிக் கொட்டுவதால் கடுமையாய் ஆத்திரமடைந்துள்ளனர் அக்கூட்டணியினர்.
‘பிரேமலதா எங்களுக்காக பிரசாரத்துக்கு வர வேண்டாம். வந்தால் நாங்கள் வேன் ஏற மாட்டோம். அந்தம்மாவை வீட்டுலேயே உட்கார சொல்லுங்க.’ என்று தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கட் அண்டு ரைட்டாக கூட்டணி வேட்பாளர்கள் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது பாவம்.
என்ன பிரச்னை? என அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்தபோது...”அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தே.மு.தி.க. முயன்றபோது விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் ‘உங்கள் கட்சியின் ஒரே முகம் விஜயகாந்த் தான். அவர் இங்கே வந்தால்தான் பேச்சை துவக்க முடியும்.’ என்றனர் இரு கட்சிகளும். இதனால் அவரை வேகவேகமாக அழைத்து வந்தனர். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து இரண்டு கட்சிகளுமே ஜெர்க் ஆகினர். ஆனாலும் பல பஞ்சாயத்துகளுக்குப் பின் போராடி அ.தி.மு.க. கூட்டணியில் செட்டிலாகியது தே.மு.தி.க. தொகுதி உடன்பாடானதும், ’பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவார்தானே?’ என்றனர் ஆனால் தே.மு.தி.க. ‘வாய்ப்பில்லை. அவர் ரெஸ்ட் எடுக்கணும். பிரேமலதா பார்த்துக் கொள்வார்’ என்றது. டென்ஷனானார்கள் ஆனாலும் வேறு வழியில்லாமல் ஓ.கே. சொன்னார்கள்.
பிரேமலதாவும் பிரசாரத்தில் இறங்கினார். அவருக்கு ஒன்றும் இது புதிதல்ல ஏற்கனவே சில தேர்தல்களில் கெத்தாக பிரசாரம் செய்திருக்கிறார். அவர் மூலம் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி அதிகரித்ததோ இல்லையோ ஆனால், அக்கட்சியின் பிரசார பீரங்கியாக அவர் இருந்தார் என்பது மட்டும் உண்மை. இந்த முறை பிரசாரத்துக்கு வந்த பிரேமலதாவின் பேச்சில் பழைய திடம் இல்லை. வேட்பாளர் பெயரில் துவங்கி பல இடங்களில் தடுமாறினார். சரி! பரவாயில்லை! என பொறுத்துக் கொண்டனர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள்.
ஆனால் கோவை பிரசாரத்தில் வைத்து ‘புல்வாமா தாக்குதலை நடத்தியதே மோடிதான்.’ என்று அவர் சொன்னபோது பி.ஜே.பி. மிரண்டுவிட்டது. ஏற்கனவே எதிர்கட்சிகள் அந்த தாக்குதலை இந்த ரீதியில்தான் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அதற்கு ஒப்புதல் சொல்வது போல், பி.ஜே.பி. கூட்டணியின் முக்கிய பேச்சாளரான பிரேமலதா இப்படி பேசியதை பி.ஜே.பி.யால் சகிக்க முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் புதுக்கோட்டையில் பிரசாரத்தில் இருந்த பிரேமலதா, அந்த மாவட்ட அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கரை ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று, ஸ்டாலின் கிண்டலடிப்பது போல் அடித்துவிட்டார். இதில் தாறுமாறாக பிரேமலதா மீது கடுப்பாகிவிட்டனர் அ.திமு.க.வினர். மக்களும் கைகொட்டி சிரித்துவிட, பிரேமலதாவுக்கே அசிங்கமாகிவிட்டது. அவரால் அமைச்சரை சமாதானப் படுத்தவே முடியவில்லை. அமைச்சராலும் இந்த அசிங்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.
அதனால் இப்பொதெல்லாம் பிரேமலதா தங்களுக்குப் பிரசாரம் செய்ய வருகிறார்!...என்றாலே தெறிக்கின்றனர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள். அந்தம்மா இங்கே வந்து ஏறுக்குமாறா பேசி, நமக்கே ஆப்படிச்சுடும். இதனால ஏற்கனவே இருக்கிற செல்வாக்கும் காலியாகிடும். அதனால பிரேமலதா பிரசாரத்துக்கு வராமல் இருப்பதே நல்லது! எனும் முடிவெடுத்துள்ளனர்.
தங்கள் தொகுதியின் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களிடம், ‘உங்க பொருளாளர் இங்கே வரவேண்டாம். நாமளே பார்த்துக்கலாம் பிரசாரத்தை.’ என்று தடை போடுகிறார்களாம். இந்த தகவல் பிரேமலதாவின் கவனத்துக்குப் போக, தனது நிலையை மட்டுமல்ல, தன் கட்சி நிலையையும் நினைத்து நொந்துக் கொண்டிருக்கிறார். தே.மு.தி.க.வுக்கே டோட்டலாக யாரோ பெரிய செய்வினை வெச்சுட்டாங்கன்னுதான் அவங்க கட்சிக்குள்ளே பேச்சு அடிபடுது. விஜயகாந்த் ஒரு காலத்துல ஓவரா பேசிப் பேசியேதான் இன்னைக்கு இப்படி ஆகிட்டார், சமீபத்துல அரசியலுக்கு வந்த அவர் மகன் பிரபாகரனும் வாய் ஓவரா பேசினார், இப்போ பிரேமலதாவும் இப்படி வாயாலேயே சறுக்கலை சந்திச்சிருக்காங்க. ஆனாலும், கூட்டணி கட்சிகளாலேயே ஒரு கட்சியின் தலைவர் தவிர்க்கப்படுறதென்பது பெரிய அசிங்கம்தான்.” என்று முடித்தார்கள்.