
பா.ஜ.க.வினரைக் கண்டாலே பிரியாணி அண்டா பத்திரம் என்று மக்கள் பீதியில் உள்ள நிலையில், அதே பிரியாணிக்காக காங்கிரஸ்காரர்கள் மத்தியில் பெரும் கைகலப்பு ஏற்பட்டு 7 பேர் வரை காயமடைந்த கதையும் நடந்து முடிந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் பிஜ்னோர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நசிமுதீன் சித்திக் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ. மவுலானா ஜமீல் என்பவரது வீட்டில் தேர்தல் கூட்டம் நடந்தது. ஜமீல் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்.
கூட்டம் முடிந்தபின் தொண்டர்களுக்கு மதிய உணவாக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. ஆனால் முதலில் யார் விருந்தில் கலந்து கொள்வது என்பதில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தின் முடிவில் காங்கிரஸ் போராளிகள் 7 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்தில் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இந்த விருந்துக்கு போலீசாரின் முன்அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். ஜமீல் மற்றும் அவரது மகன் நயீம் அகமது உள்பட 34 பேர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பிரியாணி வன்முறை மேலும் பரவிடாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.