
எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பார்கள் என்றும், அதே போல், தான் பிரச்சாரத்திற்கு வரும் நடிகர், நடிகைகளை பார்க்க மக்கள் கூடுகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வேட்பாளர் ராஜ் சத்யன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்து தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ப.சிதம்பரம் நினைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். மேலும் உப்பிற்கு கூட பயனில்லாத உதவாக்கரையாக ப.சிதம்பரம் இரருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். மேலும் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரன் அடகு வைத்த நகைக் கடனாக 20 முதல் 25 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ள நிலையில் அதனை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுவது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போன்று உள்ளது என செல்லூர் ராஜூ கிண்டல் செய்தார்.
மேலும் முன்பு குஷ்பு இளமையாக இருந்தார். கூட்டம் கூடியது, இப்போது கிழவியாகிவிட்டார் என சர்சைக்குள்ளாகும் வகையில் பேசியுள்ளார். எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பார்கள் என்றும், அதே போல், தான் பிரச்சாரத்திற்கு வரும் நடிகர், நடிகைகளை பார்க்க மக்கள் கூடுகிறார்கள் என்றும் விமர்சித்தார். காகித பூ மணக்கலாம், கருவாடு கூட மீனாகலாம் ஆனால் திமுக என்ற கட்சியை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.