தோல்வி பயத்தில் விகடன் போட்டோகிராஃபரைத் தாக்கிய காங்கிரஸ் ரவுடிகள்...

By Muthurama LingamFirst Published Apr 7, 2019, 2:53 PM IST
Highlights

விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கூட்டமே இல்லாமல் காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த விகடன் போட்டோகிராபரை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் விருதுநகர் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் பொறுக்கித்தனமாக தாக்கிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கூட்டமே இல்லாமல் காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த விகடன் போட்டோகிராபரை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் விருதுநகர் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் பொறுக்கித்தனமாக தாக்கிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை  வெளியிடும்  பொதுக் கூட்டம் விருதுநகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.இதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் துவக்கம் முதலே கூட்டம் குறைவாக இருந்த நிலையில்  சேர்கள் அனைத்தும் காலியாகி பொதுக் கூட்டம் நடந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தக் காட்சிகளை விகடன் போட்டோகிராபர் முத்துராஜ்  தனது காமிராவில் படம் பிடித்து  வாட்ஸ் ஆப்பில் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். இதனை ரொம்ப நேரமாகவே உற்று நோக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5, 6 பேர் ஆத்திரம் அடைந்தனர்.திடீரென தலையில் துண்டை முகமூடி போல் கட்டிக் கொண்டு, போட்டோகிராபர் முத்துராஜ் மீது பாய்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அவர்களின் திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்த முத்துராஜை சக பத்திரிகையாளர்கள் ரவுடிகளிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் சம்பவம் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் ஒருவர்,”''தேர்தல் அறிக்கை கூட்டம் முடிவடையும் நேரத்துக்கு முன்பே கூட்டம் கலையத் தொடங்கியது. விகடன் போட்டோகிராபர் முத்துராஜ் வாட்ஸ் ஆப்பில் லைவ் கொடுத்துக் கொண்டிருந்தார்.  இதை ரொம்ப நேரமாக  பார்த்து  கொண்டிருந்த ஒரு கும்பல் ஒன்று முத்துராஜ் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் முகம் தெரியாத வகையில் தலையில் துண்டு கட்டியிருந்தனர். கூட்டமில்லாத நாற்காலிகளை காட்டுகிறார்களே என்ற ஆத்திரம் இருந்திருக்கும் போல, நாங்களும் அங்கிருந்து கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அதற்குள் தாக்குதல் நடக்கும் சத்தம் கேட்டது. ஆறு குண்டர்கள் மாறி மாறி முத்துராஜை தாக்கினார்கள். அதில் அவர் நிலைகுலைந்து போய்விட்டார். கேமிரா எங்கோ விழுந்து விட்டது. அதற்குள் நாங்கள் ஓடிப்போய் முத்துராஜை அவர்களிடமிருந்து மீட்டோம். அதன் பின்பும் எல்லோரும் சேர்ந்து அந்த காங்கிரஸ் கட்சி ரவுடிகளை பிடிக்க முயற்சித்தோம். அதற்குள் எஸ்கேப்பாகி விட்டார்கள்” என்றார்.

இந்த தாக்குதல் குறித்து விருதுநகர் எஸ்.பி., மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்த பத்திரிகையாளர்கள், ‘தாக்குதலில் ஈடுபட்ட  ரவுடிகள் யார் யார் என்பது கண்டிப்பாக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளுக்குத் தெரியும். அவர்களை உடனே போலிஸில் ஒப்படைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

click me!