கருவுற்ற பெண்கள் பணி செய்ய தகுதியற்றவர்கள்.. இந்தியன் வங்கி சர்ச்சை உத்தரவு .. எம்.பி வெங்கடேசன் கடிதம்..

Published : Jun 12, 2022, 04:13 PM ISTUpdated : Jun 12, 2022, 04:18 PM IST
கருவுற்ற பெண்கள் பணி செய்ய தகுதியற்றவர்கள்.. இந்தியன் வங்கி சர்ச்சை உத்தரவு .. எம்.பி வெங்கடேசன் கடிதம்..

சுருக்கம்

கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள் எனும் இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்ப பெற வேண்டும் என்று எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.  

இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”  இந்தியன்‌ வங்கி அண்மையில்‌ புதிய பணி நியமனம்‌ பெறுபவர்களின்‌ உடல்‌ நலத்‌ தகுதி பற்றி வெளியிட்டூள்ள வழிகாட்டல்கள்‌ பாலின பாரபட்சத்தோடு அமைந்திருப்பதுதான்‌ காரணம்‌. அதன்‌ வழி காட்டல்‌ கூறுவது இதுதான்‌.

"பெண்‌ தேர்வர்‌ மருத்துவப்‌ பரிசோதனையின்‌ போது 12 வாரங்கள்‌ அல்லது அதற்கு மேல்‌ கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும்‌ பட்சத்தில்‌, பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம்‌ வரையிலும்‌, அவர்‌ பணி நியமனம்‌ பெற தற்காலிகமாக தகுதி அற்றவர்‌ என்று கருதப்படுவார்‌. பிரசவம்‌ முடிந்து 6 வாரம்‌ நிறைவு பெற்ற பின்னர்‌, பதிவு செய்யப்பட்ட மருத்துவர்‌ இடம்‌ இருந்து உடல்‌ நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால்‌, அவர்‌ மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல்‌ நலத்‌ தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்‌."

இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை. அரசியல்‌ சாசனத்தின்‌ பிரிவுகள்‌ 14, 15, 16 ஆகியவற்றுக்கு விரோதமானது. சட்டத்தின்‌ முன்‌ எல்லோரும்‌ சமம்‌, எந்த குடிமக்களும்‌ பாலினம்‌ உள்ளிட்ட எந்த காரணங்களாலும்‌ பாரபட்சத்திற்கு ஆளாகக்‌ கூடாது, வேலை வாய்ப்பில்‌ பணி நியமனங்களில்‌ எல்லா குடி மக்களுக்கும்‌ சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்‌, எந்த வேலை வாய்ப்புகளிலும்‌ பாலின பாரபட்சம்‌ உள்ளிட்ட வேறுபாடுகள்‌ காண்பிக்கப்படக்‌ கூடாது என்று அரசியல்‌ சாசனத்தின்‌ பிரிவுகள்‌ மிகத்‌ தெளிவாக கூறுகின்றன.

பொதுத்‌ துறை வங்கிகள்‌ அரசுக்கு உடமையானவை.  ஆனால்‌ இந்தியன்‌ வங்கியின்‌ அணுகுமுறை அதன்‌ பிற்போக்கான மன நிலையை, பாலின பாரபட்ச அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இவ்‌ வழிகாட்டல்களின்‌ நோக்கம்‌, பிரசவ விடுப்பு பயனை தவிர்ப்பது ஆகும்‌. வங்கியின்‌ அணுகுமுறை, அவர்களின்‌ ஊதிய இழப்பிற்கு இட்டுச்‌ செல்வதோடு, பணி முதிர்ச்சி காலத்திலும்‌ பாதிப்பை உண்டாக்கும்‌. 6 மாதம்‌ முதல்‌ 10 மாதம்‌ வரையிலான "பணி நியமன மறுப்பு" பணி ஓய்வு பயன்களான பி. எப்‌, பென்சன்‌, பணிக்‌ கொடை வரை பாதிப்புகளை உண்டாக்கும்‌.

இது போன்ற பிரச்சினை ஸ்டேட்‌ வங்கியில்‌ எழுந்து எனது தலையீட்டிற்கு பிறகு அந்த வழி காட்டல்கள்‌ திரும்பப்‌ பெறப்பட்டது. ஆனால்‌ இப்போது இந்தியன்‌ வங்கி அதே வகையிலான பாரபட்சத்தை இழைக்கிறது. இந்தியன்‌ வங்கியின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள தமிழ்நாடு கிராம வங்கியும்‌ இதே போன்ற வழி காட்டல்களை விடுத்திருப்பதாக அறிய வருகிறேன்‌. இந்தியன்‌ வங்கியின்‌ அறிவுறுத்தல்‌ ஆக இருந்திருக்க கூடும்‌.

தாங்கள்‌ உடனடியாக தலையிட்டு இத்தகைய பாலின அநீதியை தடுத்து நிறுத்துமாறும்‌ - இந்தியன்‌ வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி இரண்டு நிறுவனங்களும்‌ வெளியிட்டுள்ள வழி காட்டல்களை திரும்பப்‌ பெறுமாறும்‌ வலியுறுத்துகிறேன்‌. மேலும்‌ இத்தகைய பாலின பாரபட்ச வழிகாட்டல்களை வெளியிட்ட அதிகாரிகள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும்‌ வேண்டுகிறேன்‌. இக்கடிதத்திற்கு உரிய பதில்‌ கிடைக்குமென்று நம்புகிறேன்‌ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: காமராசர் பல்கலை. விவகாரம்.. சமூகநீதிக்கு எதிரான செயலை தமிழக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது..? ராமதாஸ் கேள்வி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!