அண்ணாமலைக்கு கைகள் இருக்காதா.? கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் எங்களுக்கும் தெரியும்.. திமுகவுக்கு பாஜக பதிலடி!

By Asianet TamilFirst Published Jun 12, 2022, 1:02 PM IST
Highlights

அண்ணாமலைக்கு கைகள் இருக்காது என்று திமுகவைச் சேர்ந்த கலைராஜன் எச்சரித்திருந்த நிலையில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது பாஜகவுக்கும் தெரியும் அக்கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது.  

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் வெடித்திருக்கின்றன. திமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, இரு துறைகள் மீது ஊழல் புகாரையும் கூறினார். இதனையடுத்து திமுகவின் மூத்த நிர்வாகிகளே அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  அமைச்சர் அன்பரசன் அண்ணாமலை ஒருமையில் பேசி மிகக் கடுமையாக எச்சரித்தார். இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுகவில் இருப்பவருமான கலைராஜன் குன்றத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைகள் இருக்காது” என்று மிரட்டும் வகையில் பேசினார்.

திமுகவினரின் இந்த மிரட்டல் பேச்சுக்கு தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்தக் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது பாஜகவுக்கும் தெரியும். உங்களின் அராஜகம் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது என்ற கோபத்தில் அண்ணாமலை மீது திமுகவினர் காட்டமாக இருக்கிறார்கள். அதனால்தான் மேடைகளிலும் அண்ணாமலையை  மிரட்டுகிறார்கள்.  அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என்றும்,  அண்ணாமலையை இல்லாமல் ஒழித்து விடுவேன் என்று பேசுகிறார். அமைச்சரே இப்படிப் பேசும்போது அவருக்கு கீழ்நிலையில் இருப்போர்  கொஞ்சம் கூடுதலாகத்தானே பேசுவார்கள்? 

அதன்படிதான் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் தன் பங்குக்கு அண்ணாமலையின் கைகள் இருக்காது என்று பேசியிருக்கிறார். அண்ணாமலையின் குடும்பத்தைப் பற்றி மிகவும் மோசமாக கலைராஜன் பேசியுள்ளார். ஆனால், திமுகவின் இந்தச் சலசலப்புகள் மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வித்தியாசத்தையும் திடமான முடிவுகளையும் தர பாஜக காத்திருக்கிறது. இப்போதே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.  அதற்காக இப்படியே பேசினால் பாஜக பதிலடி கொடுக்கவும் தயார். இந்தியாவையே ஆளும் பக்குவம் உடைய கட்சியாக பாஜக இருக்கிறது. அதனால் நாகரிகம் கருதி நாவையும் புஜங்களையும் கரங்களையும் அடக்கி வைத்திருக்கிறது என்பதை திமுகவினர் உணர வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்” என்று அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
 

click me!