தேர்தல் வியூகம் வகுப்பதற்கு மட்டும் இல்லை..! திமுகவின் வரவு செலவையும் கவனிக்கப்போவது பிகே தானாம்..! பரபர ரிப்போர்ட்!

By Selva KathirFirst Published Feb 5, 2020, 6:34 PM IST
Highlights

அப்படியே தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும் செலவுக் கணக்கை பிரசாந்த் கிஷோர் டீமிடம் காட்ட வேண்டியதிருக்கும். மேலும் அவர்கள் கூறுவதின்படி தான் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுப்பதற்காகவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் செலவுக் கணக்கை பராமரிக்கப்போவதே இவர்கள் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் என்றால் தேர்தல் வியூக வகுப்பாளர் என்கிற ஒரு பொதுவான பெயர் உள்ளது.  கூட்டணி அமைப்பது, தலைவர்களின் இமேஜை தூக்கி நிறுத்துவது, கள நிலவரத்தை கணிப்பது, வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்வது,  எதிர்கட்சிகளின் பலம், பலவீனத்தை கவனிப்பது போன்றவை தான் பிரசாந்த் கிஷோரின் பிளஸ் பாய்ன்ட்ஸ் என்று கூறுகிறார்கள்.

 

ஆனால் இவற்றை எல்லாம் விட மிக முக்கியமாக தேர்தலுக்கான பணத்தை செலவிடுவதில் தான் பிரசாந்த் கிஷோர் தனி வித்தை காட்டக் கூடியவர் என்கிறார்கள். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி அமோகமாக வெற்றி பெற்றார். அங்கு ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக, இளைஞர்களின் அபிமானத்தை பெற்றிருந்த பவன் கல்யானின் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளை எதிர்த்து நின்று வெற்றிகளை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெகன் மோகன் குவித்திருந்தார். இதற்கு காரணம் பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்று கூறப்பட்டது. 

அப்படி என்ன வியூகம் என்றால், ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கான தேர்தல் செலவுகளை கச்சிகமாகவும், சிந்தாமல் சிதறாமல் அவர் மேற்கொண்டது தான் என்கிறார்கள். இதே பாணியைத் தான் குஜராத்தில் மோடிக்கும், பீகாரில் நிதிஷ் குமாருக்கும் பிரசாந்த் கிஷோர் செய்து கொடுத்துள்ளார். தற்போது டெல்லியிலும் கூட ஆம் ஆத்மி செலவு கணக்குகளை பிரசாந்த் கிஷோர் கணக்கு தான் கவனித்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, மத்திய அரசை மீறி தேர்தலில் செலவு செய்வது குதிரைக் கொம்பாக உள்ளது. 

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் செலவு விவகாரத்தை பிரசாந்த் கிஷோரிடம் திமுக கொடுத்துள்ளது என்கிறார்கள். அதன்படி இனி தேர்தல் பொறுப்பாளர்களிடம் தேர்தல் நிதி இருக்காது என்கிறார்கள். அப்படியே தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும் செலவுக் கணக்கை பிரசாந்த் கிஷோர் டீமிடம் காட்ட வேண்டியதிருக்கும். மேலும் அவர்கள் கூறுவதின்படி தான் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். காரணம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றோரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பணத்தை களம் இறக்குவதில் பிரசாந்த கிஷோர் கில்லாடியாம்.

click me!