சேலத்திற்குள் ஸ்டாலின் நுழைய முடியாது...! கொதிக்கும் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்!

By Selva KathirFirst Published Feb 5, 2020, 6:22 PM IST
Highlights

ஓமலூரில் நேற்று திமுகவினரே ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். வீரபாண்டி ராஜாவின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பிற்கு வெளிப்படையாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

கொந்தளிக்கும் திமுகவினர்! வீரபாண்டியார் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டு ஸ்டாலினால்  சேலம் மாவட்டத்திற்குள் நுழைய முடியாது என்று திமுகவினரே எச்சரித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து முதலில் வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளரான ஒன்றியச் செயலாளர் பாலு என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் வீரபாண்டி ராஜாவும் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலத்தை கட்டி ஆண்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு தான் இந்த வீரபாண்டி ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பிறகு சேலம் மாவட்டச் செயலாளர் பதவி வீரபாண்டி ராஜாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை யாருக்கும் கொடுக்கும் கிட்டத்தட்ட 7 வருடங்களாக பொறுப்பாளர்களை மட்டுமே வைத்து ஸ்டாலின் கட்சியை நடத்தி வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வீரபாண்டி ராஜா நியமிக்கப்பட்டார். இதனால் வீரபாண்டியார் ஆதரவாளர்கள் சற்று அமைதி அடைந்திருந்தனர். ஆனால் கட்சி நடவடிக்கைகளில் வீரபாண்டி ராஜாவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனத்தில் சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் போன்றோரின் ஆதிக்கமே இருந்தது. போதாக்குறைக்கு செல்வகணபதியும் சேலம் திமுகவில் தனது செல்வாக்கை நிலை நாட்டி வந்தார். இருந்தாலும் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இவர்களை சமாளித்து வந்தார் வீரபாண்டி ராஜா. இந்த நிலையில் தான் ஏற்காடு ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் மூலம் வில்லங்கம் உருவானது. 

ஏற்காடு ஒன்றியத்தில் திமுக மற்றும் அதிமுக தலா 6 கவுன்சிலர்களை பெற்று இருந்தது. ஆனால் இங்கு சேர்மன் பதவியை அதிமுக வென்றது. இதற்கு காரணம் திமுக சார்பில் யாரும் போட்டியிடாதது தான். மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவின் உத்தரவை அடுத்து தான் கவுன்சிலர்கள் யாரும் போட்டியிடவில்லை. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் வீரபாண்டி ராஜா நேரடியாக டீலிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தான் அவரது பதவியை பறிக்க காரணமாக அமைந்தது.ஆனால் அரசியல் என்றால் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஆளும் கட்சியுடன் ஒரு சில இடங்களில் அனுசரித்து தான் போக வேண்டும். 

இல்லை என்றால் எப்படி லோக்கலில் அரசியல் செய்ய முடியும். அண்ணன் தனது சொத்தை வித்து திமுகவிற்கு செலவு செய்து வருகிறார். ஆனால் தேமுதிகவில் இருந்து நேற்று வந்த எஸ்.ஆர்.பார்த்திபனை சேலம் எம்பி ஆக்குகிறார் ஸ்டாலின். இது மட்டும் திமுகவிற்கு செய்யும் துரோகம் இல்லையா என வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.மேலும் சேலம் மாநகர் மற்றும் ஓமலூரில் நேற்று திமுகவினரே ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். வீரபாண்டி ராஜாவின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பிற்கு வெளிப்படையாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தனர். சேலத்தில் வீரபாண்டி ராஜா ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பேசிய திமுகவினர், ஸ்டாலின் இல்லை கலைஞரும் கூட வீரபாண்டியார் குடும்பம் என்றால் சற்று ஒதுக்கியே வைத்தார். இருந்தாலும் கட்சிக்காக அந்த குடும்பம் உழைத்து வந்தது. 

வீரபாண்டியார் மறைவை தொடர்ந்து  எப்படியாவது அவரது குடும்பத்தை ஓரம்கட்ட நினைத்த ஸ்டாலின் தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார். உடனடியாக வீரபாண்டி ராஜாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை கொடுக்காவிட்டால், ஸ்டாலின் சேலத்திற்குள் நுழைய முடியாது. திமுக கரை வேட்டிக் கட்டிச் சென்று அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று திகில் கிளப்புகின்றனர் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்.
 

click me!