
நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றுப் பேசிய மேடையை பசுவின் ‘கோமியத்தை’தெளித்து பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் சுத்தம் செய்தனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரும், மதவாத எதிர்பாளருமான கவுரி லங்கேஷ் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது முதல், நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சிக்கு எதிராகவும், மதவாதிகளுக்கு எதிராகவும் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், கர்நாடகாவின் கடலோர மாவட்டமான சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில் கடந்த 14, 15ந்தேதிகளில் ‘நம்முடைய அரசியலமைப்பும், நமது கவுரவமும் ’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகவும், மத்திய அமைச்சர் அனந்த ஹெக்டே சமீபத்தில் கூறிய கருத்து களுக்கு எதிராகவும் பேசினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்தபின், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடையில் பசுவின் கோமியம் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா அமைப்பினர் சுத்தம் செய்தனர்.
இது குறித்து கார்வார் நகரின் பா.ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் விஷால் மராத்தே கூறுகையில், “ நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை மட்டும் அல்ல, இந்த மடத்தையே பசுவின் கோமியத்தால் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்..
இதற்கு பதிலடி கொடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வௌியிட்ட பதிவில், “ சிர்சி நகரில் நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் இருந்த மேடையை பசுவின் கோமியத்தைக் கொண்டு பா.ஜனதா கட்சியினர் சுத்தம் செய்து இருக்கிறார்கள்.
இனிமேல், நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம்இதுபோன்ற சுத்தப்படுத்தும் பணியைச் செய்வீர்களா?’’ எனக் கேள்விஎழுப்பியுள்ளார்.