
தனிக்கட்சி தொடங்குவது குறித்து இன்று அறிவிப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என திடீரென குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் கிராமத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணை வீட்டிற்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இதைத் தொடர்ந்து அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார். அப்போது திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுகவை நீக்க சட்டரீதியான போராட்டம் தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக காலமதாமதம் ஆகும் என்பதால் அதற்கு முன்னதாக வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள வசதியாக தனிக்கட்சி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுவதாகவும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் தங்களின் பின்னால் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குன்னூரில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க. சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் என பார்க்காமல் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியை தந்து தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு தவறு என நிரூபித்து உள்ளனர் என குறிப்பிட்டார்.
தனிக்கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளான இன்று தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்த டி.டி.வி.தினகரன், தற்போது அந்த திட்டத்தை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்.