பவர்ஃபுல் அதிமுக வேட்பாளர்கள்..! உஷாரான மு.க.ஸ்டாலின்..! களம் இறக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்..!

By Selva KathirFirst Published Mar 16, 2021, 10:57 AM IST
Highlights

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனாலும் கூட வேட்பாளர்கள் ஒப்பீட்டு அளவில் அதிமுகவினரே பவர் புல் என்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனாலும் கூட வேட்பாளர்கள் ஒப்பீட்டு அளவில் அதிமுகவினரே பவர் புல் என்கிறார்கள்.

வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி கடைபிடித்த வியூகம் புதுமையானது. இதற்கு முன்பு வரை அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு. பலருக்கு அது பேரதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த முறை இன்ப அதிர்ச்சியே அதிகம் என்கிறார்கள். ஏற்கனவே பத்து வருடங்களாக அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. எனவே இயல்பாகவே மக்களுக்கு இந்த ஆட்சி மீது அலுப்பு தட்டுவது இயல்பு. அதே சமயம் திமுக பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லை. எனவே அவர்கள் வேட்பாளர்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுபவது வழக்கம்.

இந்த அடிப்படை தத்துவத்தை மனதில் கொண்டு அதிமுக வேட்பாளர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 20 வருடங்களிலில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், அதே சமயம் அதிமுகவில் பிரபலமாக இருந்தவர்களை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி சீட் கொடுத்துள்ளார். இவர்கள் அனைவருமே எப்படியாவது மறுபடியும் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற துடிப்புடன் இருப்பவர்கள். அதே சமயம் கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் மறுபடியும் அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்களை ஒப்பிடும் போது அதிமுக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் சீனியர்களாக உள்ளனர். அத்தோடு தொகுதியிலும் அவர்களுக்கு என்று தனியாக இமேஜ் ஒன்று உள்ளது. இமேஜ் விஷயத்தில் பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை விட அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதனால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியான நான்கு நாட்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் மண்டலப் பொறுப்பாளர்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் மத்திய மண்டல தேர்தல் பொறுப்பாளராக தொ.மு.ச பேரவை செயலாளர் சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்திற்கு பொறுப்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். வட மாவட்டங்களுக்கான பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல பொறுப்பாளராக தயாநிதி மாறனை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பாளர்களில் சண்முகத்தை தவிர மற்ற அனைவருமே திமுகவில் பவர்புல் புள்ளிகளாக வலம் வருபவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியே வேட்பாளர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வது தான் என்கிறார்கள்.

அதாவது தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் பலமானவர்களாக இருந்தால், அதற்கு ஏற்ப திமுக வேட்பாளர்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த மண்டல பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்கிறார்கள். தொகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு நிகராக திமுக வேட்பாளர்களை முன்னிலைப்படுத்துவது தான் இந்த மண்டல பொறுப்பாளர்களின் வேலைஎன்கிறார்கள்.

click me!