இன்னும் 2 நாட்களுக்குத்தான் நிலக்கரி ஸ்டாக் இருக்கு !! அப்புறம் இருளில் மூழ்குமா தமிழகம்? மின்தடை அபாயம்… அச்சத்தில் பொது மக்கள்…

By Selvanayagam PFirst Published Sep 16, 2018, 8:19 AM IST
Highlights

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முற்றிலும் நின்றுபோன நிலையில் தற்போது அனல்மின்  உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி 2 நாட்களுக்கு மட்டுமே ஸ்டாக் இருப்பதால், அதன்பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மின்வெட்டு ஏற்படம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. ‘காலப்போக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம், நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது தமிழகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

நிலக்கரி சுரங்கம் உள்ள வட மாநிலங்களில் மழை வெள்ளம் காரணமாக போதுமான நிலக்கரியை மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், மத்திய அரசு வழங்கும் நிலக்கரியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிலக்கரி தேவையான நேரத்தில் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடசென்னை அனல்மின்நிலையத்துக்கு ஆண்டுக்கு 2.09 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. வடசென்னை முதல்நிலையில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், 2-ம் நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும், தேசிய அனல்மின்நிலையமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் செயல்படுத்தி வரும் அனல் மின்நிலையத்தில் 3 அலகுகளில் 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட்டும், எண்ணூர் அனல்மின்நிலையத்தில் 450 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதவிர மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 20 மற்றும் 25 நாட்களுக்கு இருப்பு வைத்திருந்த காலம் போய் போதுமான அளவு மத்திய அரசு வழங்காததால், தற்போதைய சூழ்நிலையில் 2 நாளைக்கு தான் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 12 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கிறது. நிலைமைக்கு ஏற்ப 1,500 முதல் 3 ஆயிரம் வரை கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அனல்மின்நிலையங்கள் தான் 8 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரத்தை வினியோகம் செய்கின்றன. மீதம் உள்ள மின்உற்பத்தி நிலையங்களில் போதுமான அளவு மின்சாரம் கிடைப்பதில்லை.

தேனி  மற்றும் குமரி மாவட்டங்களில் காற்று சரிவர வீசாததால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் 400 மெகாவாட் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டு உள்ளது. இப்படி எல்லா பக்கமும் கேட் போடப்பட்டுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

இது வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது இந்த அளவுக்கு கீழான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

click me!