முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு..!! கட்டுதிட்டம் இல்லாமல் இஷ்டத்துக்கு ஆடும் தனியார் கல்லூரிகள்

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2020, 3:40 PM IST
Highlights

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுவிட்டது. இது அப்பட்டமான முறைகேடாகும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மிக முக்கிய படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டிருப்பது அநீதி எனவும், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை என்ற விதி மீறப்பட்டுள்ளது என்றும் சமூக சமத்துவ த்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில்,  கூறியிருப்பதாவது:- 

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு நடத்தும்  கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கையில் அரசு கட்டுபாட்டு இடங்களுக்கு, இறுதிக் கட்ட ( மாப்அப்)  கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு தமிழக அரசு நடத்தவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக, இது திட்ட மிட்டே புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ,முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளான ஆகஸ்ட் 31 அன்று ,கல்லூரி நிர்வாகங்களே 100 க்கும் மேற்பட்ட இடங்களை நேரடியாக நிரப்பிக் கொண்டன. இதனால்  அதிக மதிப்பெண் பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கு ,அவர்கள் விரும்பிய இடங்கள் இருந்தும் அது கிடைக்க வில்லை. குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுவிட்டது. இது அப்பட்டமான முறைகேடாகும். 

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மிக முக்கிய படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது. கலந்தாய்வை நடத்தாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக தமிழக அரசு  நடந்து கொண்டது ஏன்? முறைகேட்டை தடுக்க வேண்டிய அரசே ,முறைகேட்டிற்கு துணை போனது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன. பல முறை வலியுறுத்திய பிறகும் கூட, இந்த இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாததால், அதிக மதிப்பெண் பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த, பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலந்தாய்வு நடத்தாததை கண்டித்ததோடு, ஏற்கனவே தனியார் கல்லூரிகள் தாமாகவே நடத்திய மாணவர் சேர்க்கையையும் நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்திடம்  மாணவர் சேர்க்கைக்கான காலநீட்டிப்பிற்கு அனுமதி பெற்று ,தமிழக அரசு இறுதிகட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும். அதன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது . தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மருத்து மாணவர் சேர்க்கையில் நடைபெறும் இத்தகைய முறைகேட்டை தடுத்திட, தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் இடங்கள் அனைத்திற்கும் மாநில மற்றும் மத்திய அரசுகளே `மாப்அப்’ என்னும் இறுதிக் கட்ட கலந்தாய்வை  நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அதுவே முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் முடிவு கட்டும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிப் படுத்தும்.  மாணவர் சேர்க்கையின் இறுதி நாளான ஆகஸ்ட் 31 அன்று , தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. அது முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை நேரடியாக சேர்த்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!