கொரோனா நெருக்கடியிலும் காசநோய் ஒழிப்பில் தீவிரம் காட்டிய தமிழக அரசு: எடப்பாடியாரை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2020, 3:21 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஊரடங்கு காலத்திலும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஊரடங்கு காலத்திலும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேலையில் காச நோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், கண்காணிப்பு, ஆகியவை எவ்வித தயக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 

தமிழ்நாட்டில்  காசநோய்க்காக வெளி நோயாளிகளாக தொடர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு காச நோய்க்கான மருந்து மாத்திரைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50,038  காசநோயாளிகளுக்கு, இரண்டாயிரத்து 451 டன் மருந்து, எதிர்ப்பு காச நோயாளிகளுக்கும் (MDR TB) என மொத்தம் 52.489 காசநோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதும் தேவைப்படும் காசநோய் மருந்துகள், காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்படும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காச நோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் (continuous monitoring)மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும்  காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு, சத்தான உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பன்முக நடவடிக்கைகள் மூலம், காசநோயாளிகள் எவ்வித சிரமமுமின்றி ஊரடங்கு காலத்திலும் சிறப்பான சிகிச்சையை அளித்து வரும் சரியான செயல்பாட்டினை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!