எம்.ஜி.ஆருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் - மோடிக்கு சசிகலா வலியுறுத்தல்

First Published Jan 6, 2017, 12:42 PM IST
Highlights


எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்‍கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல்தலையும் உடனடியாக வெளியிட நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்‍கு கடிதம் எழுதியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா  பிரதமர் திரு.நரேந்திரமோடிக்‍கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்  எம்.ஜி.ஆருக்‍கு, அவரது மகத்தான மக்‍கள் சேவையை கருத்தில்கொண்டு, நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் தமிழக மக்‍களால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று அழைக்‍கப்பட்டதையும் சசிகலா நினைவுகூர்ந்துள்ளார். 



1987-ம் ஆண்டு பாரத் ரத்னா டாக்‍டர் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை இந்திய அரசு வழங்கி கவுரவித்தது-

 எம்.ஜி.ஆர். எத்தனையோ திட்டங்களை தமது ஆட்சிக்‍ காலத்தில் தொடங்கி வைத்தபோதிலும், 1982-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் மகத்தான வெற்றிபெற்றது-

 இதன் மூலம், மதிய உணவு மையங்களில் லட்சக்‍கணக்‍கான பள்ளிக்‍ குழந்தைகள் வயிறார உணவு உண்டனர்- இந்த திட்டம் அமல்படுத்த சாத்தியமானது அல்ல என கூறப்பட்டபோதிலும் எம்.ஜி.ஆர். இத்திட்டத்தை செயல்படுத்தி காட்டினார்

 

 இதன் மூலம் குழந்தைகளுக்‍கு சூடான புதிதாக சமைக்‍கப்பட்ட உணவு, லட்சக்‍கணக்‍கான பசியால் வாடிய குழந்தைகளுக்‍கு வழங்கப்பட்டன- இதன் மூலம் பசி ஒழிக்‍கப்பட்டதுடன், பள்ளிகளில் மாணாக்‍கர்களின் வருகையும் அதிகரித்தது

 இத்திட்டம் இன்றும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது- இந்தியாவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது- இதற்கு, நாடு முழுவதிலும் மட்டுமின்றி, ஐ.நா. சபையிலும் கூட பாராட்டுகள் குவிந்தன என்று கழகப் பொதுச்  செயலாளர் சசிகலா  குறிப்பிட்டுள்ளார்.


சிறந்த நடிகராகவும், மாபெரும் அரசியல்வாதியாகவும் விளங்கிய  எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டில் தெய்வமாகவே போற்றப்பட்டார்- 1962ல் தமிழக சட்டமேலவை உறுப்பினராக பொறுப்பேற்ற அவர், 1967ல் சட்டப்பேரவைக்‍கு தேர்ந்தெடுக்‍கப்பட்டார்

 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகத்தை தோற்றுவித்த அவர், 1973-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்- இதனைத் தொடர்ந்து, 1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று ஆட்சிக்‍கு வந்தது-

 எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று, 1987-ம் ஆண்டு டிசம்பரில் அவர் மறையும் வரை ஆட்சி அதிகாரத்தில் நீடித்தார்- இதுவரை இந்த சாதனையை எவரும் புரிந்ததில்லை என்றும் சசிகலா  புகழாரம் சூட்டியுள்ளார்.



கோடிக்‍கணக்‍கான மக்‍களின் இதயங்களை கவர்ந்த இத்தகைய உன்னத தலைவரின் பிறந்தநாள் நூற்றாண்டுவிழா தொடங்கும் ஜனவரி 17-ம் தேதி, சிறப்பு அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் அவரது உருவத்துடன் வெளியிடப்படவேண்டியது அவசியமாகும்-

 எனவே, எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நினைவு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல்தபால்தலை வெளியிட பிரதமர் உடனடியாக தேவையான நடவடிக்‍கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்‍கொள்வதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

click me!