"உலகெங்கும் வாழும் தமிழர்களுக்‍கு எம்.ஜி.ஆர். ஊக்‍கசக்‍தியாக விளங்குகிறார்" - பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்

First Published Jan 6, 2017, 12:33 PM IST
Highlights


முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்‍கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மக்‍களிடையே மிகுந்த செல்வாக்‍கும், வசீகரமும் பெற்ற தலைவராக விளங்கி வந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

அவர் தொடங்கிய பல்வேறு புதுமையான திட்டங்களும், நலத்திட்டங்களும் நாடுமுழுவதும் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவு திட்டம், உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றதோடு, அனைத்து மாநிலங்களும் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த டாக்‍டர் எம்.ஜி.ஆர். அடித்தளம் அமைத்தார். அவரது சேவையை பாராட்டும் வகையில் இந்திய அரசு  எம்.ஜி.ஆருக்‍கு பாரத் ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்‍களுக்‍கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்‍கும் எம்.ஜி.ஆர். ஊக்‍கசக்‍தியாக விளங்கி வருகிறார்-

அவரது பெருந்தன்மை, கொடை உள்ளம், அசைக்‍க முடியாத தலைமைப் பண்பு, மாநில உரிமைகளைப் பெறுவதில் அவர் காட்டிய உறுதி ஆகியவை அனைவராலும் மறக்‍க முடியாதவை

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக மக்‍களின் இதயங்களில் நிரந்தரமாக வீற்றிருக்‍கும் அவருக்‍கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்‍கும்

இதனை, தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்‍கள் மட்டுமின்றி, நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள் என்றும்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நினைவு நாணயம் மற்றும் அஞ்சல்தலை வெளியிட தேவையான அனைத்து விவரங்களையும் உடனடியாக இந்திய அரசுக்‍கு அனுப்பி வைக்‍க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்‍கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் 17-ம் தேதி தொடங்கவிருக்‍கும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு நினைவு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் அறிவிப்பை விரைவில் வெளியிட்டால் தான் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

click me!