ஓபிஎஸ்,டிடிவியை ஒதுக்கிவிட்டு,சசிகலாவை சேர்த்து கொள்ள தயாராகும் இபிஎஸ்.?புதிய குண்டை தூக்கி போடும் பூங்குன்றன்

By Ajmal KhanFirst Published May 18, 2023, 8:31 AM IST
Highlights

பங்காளிகளிடம் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, பகையாளிகளிடம் சண்டை போடத் தொடங்குங்கள். வெற்றி உங்களை தேடி வரும் என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
 

அதிமுக அதிகார மோதல்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் பல பிளவுகளாக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், ஆன்மிகத்தை நாடி சென்றுள்ளார். அவ்வப்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பாக கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில், பூங்குன்றன் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில்,   அரசியலை நான் அன்னையிடமிருந்து கற்றுக் கொண்டவன். நான் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆன்மீக பதிவை போட்டாலும்  சிலர் அரசியல் பதிவாக பதிலளிக்க தொடங்கி விடுகிறார்கள்.

ஜெயலலிதாவை மறந்தது போல் நடிக்கிறார்கள்

சிலர் நான் போட்ட பதிவை சரியாக படிக்காமல் வேறாக யூகித்துக் கொண்டு அவர்கள் மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அவர்களை புகழ்ந்து பாடும் பதிவுகளிலும் சம்பந்தமே இல்லாமல் கம்பி சுற்றுவதுதான் வேதனை. நான் போடும் பதிவுகளை பார்த்து தலைவர்களே கோபப்பட மாட்டார்கள். நீங்கள் கோபப்படுவது தான் ஆச்சரியம்! பலருக்கு அம்மாவை மறக்க மனம் இல்லை என்றாலும் இன்றைய தலைவர்களை குஷிப்படுத்துவதற்காக அம்மாவை மறந்தது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் தலைவர்கள் பல பாதைகளை கடந்து வந்தவர்கள். முகநூலில் ஆதரவு பதிவை போட்டு அவர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள்.

யாருக்கு யார் ஆதரவு? யாருக்கு யார் எதிரி?

உங்களைப் போன்று பலரைப் பார்த்தவர்கள் அவர்கள். ஒரே நாளில் அவர்கள் தலைவர்களாக ஆகிவிடவில்லை. எல்லாவற்றையும் கடந்து தான் தலைவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். களத்தில் இறங்கிப் போராடுங்கள். எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அது உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு சொல்லும். எதிரிகளை எதிர்க்கப் பயப்படும் நீங்கள் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எதிர்த்து கொண்டிருக்கிறீர்கள்.  இன்றைய அரசியல் சூழ்நிலை குழப்பமாகவே இருக்கிறது. யாருக்கு யார் ஆதரவு? யாருக்கு யார் எதிரி? என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிப்படையாக எதிரிகளாக தெரிபவர்கள் கூட ரகசியமாக பேசிக் கொள்கிறார்கலாம்.

சசிகலாவை சேர்த்து கொள்ள தயாராகும் இபிஎஸ்

தன் நலத்திற்காக எதையும் செய்து கொள்ளத் தயாராகிவிட்டார்கள். காற்று அடிக்கும் திசையில் பயணிக்க காத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அவர்களும், ஈபிஎஸ் அவர்களும் இணைவார்கள் என்று பார்த்தால் ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள். இணைவதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகவே பலர் பேசவும் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அடிமட்ட தொண்டர்களோ இன்று கூட எல்லோரும் சேர்ந்தால் பலமாக இருக்கும் என்று தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நடப்பவற்றை கூர்ந்து கவனித்தால் மற்றவர்களை புறம் தள்ளிவிட்டு சின்னம்மா அவர்களை மட்டும் ஈபிஎஸ் சேர்த்துக் கொள்வார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதுவே ஒரு சமுதாயத்தை ஈர்க்கும் விடயம் ஆக அமையும் என்றே உணரத் தோன்றுகிறது.

பகையாளியிடம் சண்டை போடுங்கள்

நன்றி மறந்த ஈபிஎஸ் என்று சொல்லும் நாக்கள் நன்றி மறவாத ஈபிஎஸ் என்று சொல்லும் காலம் வருகிறதோ? இது அரசியல் ரீதியான சாணக்கியத்தனமாகவும் இருக்குமோ?  எது எப்படியோ கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கடமையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா..! பங்காளிகளிடம் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, பகையாளிகளிடம் சண்டை போடத் தொடங்குங்கள். வெற்றி உங்களை தேடி வரும் என பூங்குன்றன் பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பாக களத்துக்கு வரும் தலைவர்..! கிருஷ்ணசாமியை வச்சு செய்யும் செந்தில் பாலாஜி

click me!