வெயிலின் அருமை நிழலில் தெரியும்.. கொடநாடு நியாபகத்தை கிளறி சசிகலாவின் நினைவை பகிர்ந்த பூங்குன்றன்..!

By vinoth kumarFirst Published Aug 18, 2021, 3:58 PM IST
Highlights

இண்டர்காம் அடித்தது. எடுத்தேன். சின்னம்மா பேசினார்கள். எப்பப்பா வந்த? என்று கேட்டுவிட்டு, பரிசோதனை குறித்த விபரங்களை கேட்டறிந்தார். யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதாகச் சொன்னேன். அப்படியா! கொள்ளு ரசம் வைத்து குடித்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் சமையலறையிலிருந்து ஒரு வாலி நிறைய கொள்ளு ரசம் வந்துவிட்டது.

சசிகலாவின் 72வது பிறந்தநாளான இன்று தமிழக முழுவதும் அமமுக, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீங்கள் நல்ல உடல் நலமும், மன நலமும் பெற்று நிம்மதியாய் நீடு வாழ வேண்டும் என பூங்குன்றன் வாழ்த்தியுள்ளார். 

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- கொடநாட்டில் தங்கியிருந்த நேரம். உடன் பணியாற்றியவர்கள் உங்கள் பாதம் வீங்கிய மாதிரி தெரிகிறதே என்றார்கள். நானோ என் பாதமே அப்படிதான் என்று சொல்லி வந்தேன். பார்க்க வந்தவர்களில் சிலரும் இப்படி கேட்டவுடன் எனக்கே பயம் வந்தது. சென்னை வந்தவுடன் ரத்த பரிசோதனை செய்வதற்கு அரசு ஸ்டான்லி மருத்துமனைக்கு சென்றேன். பொறியாளர் சேகர் அவர்களை சந்தித்தேன். அவரும் உடன் இருந்து பரிசோதனைக்கு தேவையான உதவிகளை செய்தார். நண்பரின் அன்பில் நனைந்தேன். அன்று பணிக்கு செல்ல மனமில்லாமல் பரிசோதனை முடிய நேரம் ஆகும் என்று சொல்லி நாளை பணிக்கு வருகிறேன் என்று கார்டனுக்கு தகவல் சொன்னேன்.

 விடுமுறை என்பதே எனக்கு அரிது. நாளை வருகிறேன் என்று சொன்ன பிறகு மனதில் அப்படி ஒரு சந்தோஷம். மதியம் மருத்துவமனை கேன்டீன் சாப்பாட்டை வரவழைத்து தந்தார் நண்பர். எளிமையாகவும், அருமையாகவும் இருந்தது. நிறைந்த வயிறு மனமார பாராட்டியது. மாலையில் ரத்த பரிசோதனையில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தான் இந்த கால் வீக்கம் என்பதும் புரிந்தது. பெரிய அளவில் இல்லை என்றாலும் மனம் முழுக்க பயம் பரவியது. அடுத்தநாள் வழக்கம்போல் பணிக்கு சென்றேன். உடனிருப்பவர்கள் விசாரித்தார்கள். நடந்தவற்றை சொன்னேன். வழக்கம்போல் பணியில் மூழ்கிப்போனேன். 

இண்டர்காம் அடித்தது. எடுத்தேன். சின்னம்மா பேசினார்கள். எப்பப்பா வந்த? என்று கேட்டுவிட்டு, பரிசோதனை குறித்த விபரங்களை கேட்டறிந்தார். யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதாகச் சொன்னேன். அப்படியா! கொள்ளு ரசம் வைத்து குடித்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் சமையலறையிலிருந்து ஒரு வாலி நிறைய கொள்ளு ரசம் வந்துவிட்டது. சின்னம்மா மீண்டும் தொடர்புகொண்டு கொள்ளு ரசம் கொடுத்துவிட்டார்களா? இதை கொஞ்சம் கொஞ்சமாக குடி, யூரிக் அமிலத்தின் அளவு கொஞ்ச நாட்களில் குறைய ஆரம்பிக்கும் என்றார். இது எப்படி இவருக்கு தெரியும் என்று சிந்தித்துக்கொண்டே ரசத்தை குடித்து முடித்தேன். அடுத்தடுத்த நாட்களில் என்னை தேடி அலுவலகத்திற்கு கொள்ளு ரசம் வந்தது. சுவையும் அருமையாக இருந்ததால் நானும் குடித்து மகிழ்ந்தேன். 

அம்மாவை பார்க்க வந்த மருத்துவர் ஒருநாள் என்னை அழைத்து, உங்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது என்று அம்மா சொன்னார்கள். இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அசைவ உணவுகளை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள், அதுதான் நல்லது என்று சொன்னார். மன அழுத்தத்திற்கான மருந்தை சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டாரே என்ற வருத்தமே என்னை வாட்டியது. அறிவுரையின்படி நடந்தேன். கொஞ்ச நாட்களில் யூரிக் அமிலத்தின் அளவும் குறைந்தது. யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு தரப்படும் மாத்திரை கொள்ளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது என்பதையும் மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்களே! அதுபோல பல நேரங்களில் அம்மாவின் கோபத்தை நடுவிலிருந்து கிரகித்து மற்றவர்களுக்கு அதன் வேகத்தை குறைத்து கொடுத்தவர். சுவைத்து சாப்பிடுபவர்களுக்கு எப்படி நெருப்பின் உஷ்ணம் தெரியும்? நெருப்பில் நின்று சமைத்தவர்களுக்குத்தானே அது புரியும்! அப்படி உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு பலருக்கு சுவையான வாழ்க்கையை தந்தவர். எதற்கும் துவண்டுவிடாத போராளி. அம்மாவின் தோழமை! நீங்கள் நல்ல உடல் நலமும், மன நலமும் பெற்று நிம்மதியாய் நீடு வாழ, பிறந்தநாளில் என் அப்பன் சுப்பனிடம் பிரார்த்திக்கின்றேன். என்னோடு பழகிய உறவிலும், நட்பிலுமே எதிர்பார்ப்போடு பழகியவர்கள்தான் அதிகம் என்பதால், உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களை அப்புறப்படுத்தி, உண்மையாக நேசிப்பவர்களோடு நீங்கள் பயணிக்க பாம்பன் சுவாமிகள் அருள வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

click me!