
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த அதிகாரச் சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி இவர்களில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கப்போகிறார் என்ற சஸ்பென்ஸ் முடிவடைந்தது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்களுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தனவோ அவை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாண்டியராஜன் ஓபிஎஸ் பக்கம் வந்துவிட்டதால் அவரது துறை மட்டும் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் பணியாற்றி வந்த நிதி அமைச்சகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவனிக்க உள்ளார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு பிரச்சனைக்கு காரணம் பாஜக தான் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பொன்,ராதாகிருஷ்ணன், தமிழிசை, அருண் ஜெட்லி என பாஜகவின் முக்கிய தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துவந்தனர்.
இந்நிலையில் தற்போது அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவையால் தமிழகத்திற்கு எந்த பயனும் இருக்காது என நாகர்கோவில் செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இத்தனை நாளும் தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவை குறை சொன்னவர்கள், தற்போது என்ன சொல்லுவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.