
தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசியல் செய்ய நினைத்தால் ஆதின பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது என்றும் அவர் மத்திய பாஜக அரசை தாக்கினார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பாஜகவினர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர் பெருமக்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமின்றி திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி, இந்து விரோத கட்சி என்ற பிரச்சாரத்தையும் பாஜக தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் மதுரை ஆதினம் வழக்கத்துக்கு மாறாக திமுக அரசை விமர்சிக்கும் வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சு, கருத்து அனைத்தும் திமுக அரசை தாக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த துறவிகள் மாநாட்டில் பேசிய அவர், இந்து சமய அறநிலைத்துறை கொள்ளைக் கூட்டம் போல செயல்பட்டு வருகிறது,
மக்கள் உண்டியலில் காசு போடாதீர்கள், இந்து சமய அறநிலைத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு ஆதினங்கள், மடாதிபதிகளிடம் கொடுக்க வேண்டும். ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என கூறுகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளுக்கு கோவில்களில் என்ன வேலை, கோவில்களில் அரசியல் புகுந்துவிட்டது. அரசியல்வாதிகள் அனைத்து கோவில்களிலும் தக்கார்களாக உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாத ஒரு துறை என கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேச்சுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில் மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து அவர் இப்படி நடந்துகொண்டால் அவருக்கு பதில் சொல்ல பல வழிகள் உள்ளது. ஆதினம் அரசியல் செய்வதை இந்து சமய அறநிலைத்துறை ஒரு போதும் என பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் ஆதீனத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர் எச். ராஜா அண்ணாமலை போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு அமைச்சரை ஆதீனத்தை இப்படி மிரட்டுவதாக என்று ஆதீனத்திற்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகத்திலுள்ள ஆதீனங்களின் அரசியல் புகுந்துள்ளது அரசை பற்றி அதீனங்கள் விமர்சனம் செய்கிறார்கள். இது பாஜகவின் தூண்டுதலால் நடைபெற்று வருகிறது, ஆதினங்கள் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசியல் செய்ய நினைத்தால் ஆதின பொறுப்பில் இருந்து வெளியே வரட்டும் இல்லையெனில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நிற்கிறது. பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படுகின்றன என குற்றம்சாட்டினார். மேலும் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பேச பாஜகவே தூண்டிவிட்டது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக ஆதினங்கள் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஆதீனத்தில் இருந்து விலக வேண்டும் என நாராயணசாமி பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாக பார்க்கப்படுகிறது.