ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் உடனே இதை செய்யுங்க.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு.!

By vinoth kumarFirst Published Jun 11, 2022, 12:43 PM IST
Highlights

கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும், போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

கொரோனா தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும் அதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும், போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 43 இலட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. 

எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

click me!