தமிழகத்தில் பாஜகவை ஆளுங்கட்சியாக்க முயற்சி... பொன்.ராதாகிருஷ்ணன் பொளேர்..!

By Asianet TamilFirst Published Sep 28, 2020, 8:31 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜகவை ஆளுங்கட்சியாக கொண்டுவரக்கூடிய பணியே எங்களுடைய பணி. அதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக வளர்கிறது. இதைக் கண்டு திமுகவுக்கு அடிவயிறு பற்றி எரிகிறது. வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம் மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. 15 கட்சிகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் 100 பேர் கூட கலந்துகொள்ளவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டுவிட்டார்கள்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அறிஞர் குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவுதான் வேளாண் சட்டம். இதை விவசாயிகள் எல்லோரும் வரவேற்கிறார்கள். இதை வைத்து அரசியல் நடத்த விரும்புகிறார்களோ அவர்களே சட்டத்தை எதிர்க்கிறார்கள். டெல்லியில் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓடச்செய்து கேவலப்படுத்தியது திமுகதான். திமுகவை பொறுத்தவரை தமிழர்கள் என்றோ, விவசாயிகள் என்றோ பார்க்காது. அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் நிர்வாணப்படுத்தி ஓட விடுவார்கள்.

விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் சட்டங்கள்  குறித்து விவசாயிகளுக்கு முழு விவரம் தெரிய வரும். அப்போது விவசாயிகளும் இதை முழுமையாக வரவேற்பார்கள். தேசிய அளவில் தமிழக பாஜகவினருக்கு பதவி வழங்காததை நாங்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் பாஜகவை ஆளுங்கட்சியாக கொண்டுவரக்கூடிய பணியே எங்களுடைய பணி. அதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக நல்ல முறையில் நடக்கும்” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

click me!