
திராவிட கட்சிகளின் காலம் முடிகிறது.. இனி பாஜகவின் காலம்தான் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொது தெரிவித்தார்.
இம்மாதம் 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் பல்வேறு குழப்பங்களில் வணிகர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளதால் விலைவாசி குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. திராவிட கட்சிகளின் காலம் தமிழகத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இனி பாஜகவின் காலம்தான் என்றார்.
ஜி.எஸ்.டி. வரி, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.
இது பெரிய பிரச்சனையே இல்லை. ஒரு வாரம் பொய் சொல்லலாம். ஒரு மாதம் பொய் சொல்லலாம். எப்போதும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. எப்படியும் உண்மை வெளியே வந்துவிடும் என்றார்.
தியேட்டர் ஊழியர்களின் போராட்டத்துக்கும், ஜி.எஸ்.டி.க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழக அரசின் உள்ளாட்சிக்கான கேளிக்கை வரியை கண்டித்துதான் தியேட்டர் உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.