
கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட பணம், வங்கிப் பணம் என்று உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இது பற்றி வழக்கை போட்ட திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் , மேலிட உத்தரவால் வங்கிப்பணம் என்று சிபிஐ கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது , திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி என்ற இடத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும் ஆந்திராவில் உள்ள கரன்சி மையத்திற்கு கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும், ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், பணம் கொண்டு செல்லப்பட்டவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் திமுக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பணம் வங்கிகளுக்கு சொந்தமானது என்றும் கோவையில் இருந்து விசாகபட்டினத்திற்கு வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்று சிபிஐ இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து வழக்கை போட்ட திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, மேலிட உத்தரவால் வங்கிப்பணம் என சிபிஐ கூறியிருக்க வேண்டும், மேலிட அழுத்தம் காரணமாகவே இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்ந்தபோதே சிபிஐ அலட்சியமாக இருந்ததாகவும், கண்டெய்னர் லாரிகளின் பதிவெண் போலி என கூறியபோது அலட்சியம் காட்டப்பட்டது என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.