
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க கோரிய வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அதிமுக தொண்டர் பி.ஏ. ஜோசப், நாகை மாவட்ட செம்பனார்கோயில் அதிமுக பிரமுகர் ஞானசேகரன், சேலத்தை சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக பொது நல வழக்குஒன்றை தொடர்ந்தனர்.
அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி திடீர் உடல் நலக் குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 தேதி திடீரென்று இதய செயல்பாடு நின்றுபோனதால், மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததாகவும், தெரிவித்திருந்தனர்.
அவரது உடல் நலம் குறித்து, கட்சி நிர்வாகிகளும் மருத்துவர்களும் ஊடங்களுக்கு பேட்டி அளித்ததாகவும், ஆனால், அவர் சிகிச்சை பெற்று வந்த புகைப்படமோ , வீடியோ காட்சிகளோ வெளியிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும் அவர் வழக்கமான உணவு எடுத்து வருவதாகவும். நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தொரிவிக்கபட்ட நிலையில் அவரது திடீர் மரணம் பல்வேறு விதமான சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா கன்னத்தில் 4 துளைகள் போடப்பட்டுள்ள காட்சியானது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே அவரது மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷனை மத்திய அரசு அமைக்க உத்திரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ, டி.ஆர்.ஐ விசாரணை வேண்டும் என ஞானசேரனும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாலமுருகனும் மனுவில் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜயன் வேறு வழக்குக்காக உச்சநீதிமன்றம் ஆஜராகியுள்ளதால் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரினர்.
இதையடுத்து இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.