
தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் திகழ்கிறது என்றும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழகம் சர்வநிச்சயமாக அமைதி பூங்காவாக இல்லை. பல்வேறு பயங்கரவாத இயக்கங்களின் பயிற்சி முகாமாக தமிழகம் இருந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை வகுத்துக்கொண்டு பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். தமிழகத்தில் மிக மோசமான பயங்கரவாத செயல்கள் நடைபெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் பயங்கரவாதிகளின் செயல். அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் நடத்திய போராட்டம் அது. தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். காவல்துறையினர் அமைதியாக இருக்கின்றோம் என்று எள்ளி நகையாடாதீர்கள். காலம் ஒரே மாதிரியாக இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், ஓ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் பயங்கரவாதம் உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார்.