ஸ்டாலினுக்கு இப்போதான் ஞானோதயம் வந்ததா? ஓடவிட்டு அடிக்கும் ஓபிஎஸ்

First Published Feb 15, 2018, 11:10 AM IST
Highlights
deputy chief minister panneerselvam criticize stalin


போக்குவரத்து துறையை சீரமைக்க வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதான் ஸ்டாலினுக்கு வந்ததா? என துணை முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, போக்குவரத்து துறையின் நஷ்டங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை 50 முதல் 100% வரை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து திமுக ஆய்வு செய்தது. அந்த ஆய்வறிக்கையை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக 27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை ஸ்டாலின் வழங்கினார். அதை பின்பற்றினாலே கட்டண உயர்வு தேவைப்படாது என ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் வழங்கிய பரிந்துரைகளை அரசு செயல்படுத்துமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், 2006-2011 காலத்திலான திமுக ஆட்சியில் தான் போக்குவரத்துத்துறை கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. போக்குவரத்து துறைக்கு சொந்தமானவை அடமானத்தில் இருந்தன. அவையனைத்தையும் மீட்டெடுத்து அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறையின் நஷ்டத்திற்கு காரணமே திமுக தான். அப்போது இந்த பரிந்துரைகளை ஸ்டாலின் தெரிவித்தாரா? மக்கள் மீதும் போக்குவரத்து கழகத்தின் மீதும் அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இதை வழங்கியிருக்கலாமே? இப்போதுதான் ஸ்டாலினுக்கு ஞானோதயம் வந்ததா? என பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

இதன்மூலம் திமுகவின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது என பன்னீர்செல்வம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆய்வறிக்கையை கொடுக்க வந்த ஸ்டாலினிடம் முதல்வரை விட அதிக நேரம் சிரித்து பேசியது பன்னீர்செல்வம்தான்.

எதிர்க்கட்சியின் பரிந்துரைகள் என்பதற்காகவே அவற்றை உதாசினப்படுத்தாமல் செயல்படுத்த முனைந்தால் ஆரோக்கியமான அரசியல் தமிழகத்தில் மலரும். ஆனால் திமுகவின் பரிந்துரைகளை ஏற்க முடியாது என்பதுபோல பேசியிருக்கிறார் ஓபிஎஸ். அப்படி கண்டிப்பாக செயல்படுத்த முடியாதென்றால், இதை அன்றைக்கே ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்திருக்கலாமே? என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

click me!