
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறவே கமல் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகக் கூறி நிகழ்ச்சியை தடை செய்யவும், கமல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.
இது குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்றும், ரஜினிகாந்த் இன்று சொல்லுகிறார் நான் முன்னரே கூறியதாகவும் கமல் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்து வருகிறது. இது குறித்து எம்.எல்.ஏ. கருணாஸ் பேசுகையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றால் களத்தில் இறங்கி போராடலாம் என்றும் சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதேபோல், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஊழல் மலிந்து விட்டதாகக் கூறும் கமல், அரசியலில் இருந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் என்றார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறவே கமல் கருத்துக்களை தெரிவித்து வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்தும் வகையில் கமல் கருத்து உள்ளதாகவும், விஸ்வரூபம் படம் வெளிவர அரசு எடுத்த முயற்சிகளை கமல் மறந்துவிடக் கூடாது என்றார். மேலும் பேசிய அவர், எந்தத் துறையில் உழல் நடப்பதை கமல் பார்த்தார் எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.