
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வசதி குறித்த விசாரணைக்குப் பிறகே கருத்து கூற முடியும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகக் டிஐஜி ரூபா புகார் ஒன்றைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். குறிப்பாக சசிகலாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதற்கு தனியாக ஒரு சமையல் கூடத்தையே சிறைக்குள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இந்த சலுகைகளைப் பெற சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பினர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக டிஐஜி ரூபா புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாருக்கு சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா மறுப்பு கூறியிருந்தார். இதனை அடுத்து டிஐஜி ரூபா புகார் குறித்து, தனிக்குழு அமைக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
டிஐஜி ரூபாவின் புகார் தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள், லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்றும் பேட்டி அளித்து வருகின்றனர். பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பணம் பாதாளம் வரை பாயும்; தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டது குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து தரப்பட்டது குறித்த விசாரணைக்குப் பிறகே கருத்து கூற முடியும் என்றார். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை, தமிழக அரசு முறையாக அணுகவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.