
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்கள் கூறுவதை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளித்த நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
கமலின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது போன்று தான் தோன்றித் தனமாக கருத்து சொல்லக் கூடாது என அமைச்சர் ஜெயகுமார் கம்லஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன், கமலஹாசன் எல்லாம் ஒரு ஆளா? அவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என ஒருமையில் அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமலஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். அப்படி ஊழல் இருந்ததால் கமலஹாசன் அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை நான் ஆய்வு செய்யட்டுமா? என எஸ்.பி.வேலுமணி மிரட்டலும் விடுத்தார்.