
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக கூறிய டிஐஜி ரூபா ஒரு விளம்பரப் பிரியர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.
விழா மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயசுமார், சேவூர் ராமசந்திரன் கலந்து கொண்டனர்.
கால்கோள் விழாவுக்குப் பிறகு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா ஒரு விளம்பர பிரியர் என்று கூறினார்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்றும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
டிஐஜி ரூபா புகார் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனிக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகே உண்மை தெரிய வரும் என்றும் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.
நீட் தேர்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா இருந்தபோதே எதிர்த்து வந்தோம். தற்போதும் அதனை தொடர்ந்து எதிர்ப்பு நிலையிலேயே உள்ளோம் என்றார். மேலும் மாணவர்களின் நலன் காக்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 85 சதவீதங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.