அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு 6 பேர் விடுதலை தீர்ப்பே ஆதாரம்- மு.க.ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Nov 11, 2022, 4:13 PM IST
Highlights

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை, நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6 பேர் விடுதலை- முதலமைச்சர் வரவேற்பு

ராஜிவ் காந்தி கொலையாளிகள் 6 பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து - இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

தீர்மானத்தை கிடப்பில் போட்ட ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம்.  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம். மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். இந்நிலையில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம்.

சட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி

மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான்  பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது.அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன்,  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு  மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது  இரண்டாவது வெற்றி.  ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது.  

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு  உச்சநீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது  வரவேற்புக்குரியது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தாமதத்திற்கு காரணம் ஆளுநர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,  30 ஆண்டுகள் இருண்ட சிறையில், தூக்குக் கயிற்றின் நிழலில் சித்திரவதைப்பட்டவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு விமோசனம் பிறந்துள்ளது. இந்த 30 ஆண்டு கால வாழ்க்கை திரும்ப வரப்போகிறதா? இழந்து போன காலம் திரும்ப வரப்போவதில்லை. எனினும் இப்போதாவது கிடைத்த இந்த விடுதலை பெரிய நிம்மதி என தெரிவித்துள்ளார்.  இந்தத் தீர்ப்பு ஆளுநருடைய அராஜக போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி. அவர்களின் விடுதலை தாமதமானதற்கு காரணமே தமிழக ஆளுநர் தான். மனசாட்சியும், மனிதாபிமானமும் அற்றவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கிறார் என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய  6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது! 6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.  இது வரவேற்கத்தக்கது!

காலவரம்பு நிர்ணயிக்கனும்

6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை.  அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது  4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்! அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 இதையும் படியுங்கள்

அரசு, தனியார் மருந்தகங்களில் காலாவதி மருந்துகள்..! பறக்கும் படை அமைப்பு- ம.சுப்பிரமணியன் அதிரடி

click me!