
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நாஞ்சில் பிரசாத், மாநகராட்சி தேர்தலில் 165 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாஞ்சில் பிரசாத் மறைவு தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சென்னை மாநகராட்சிமன்ற உறுப்பினருமான ஆற்றல்மிக்க செயல்வீரர் திரு நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்கள் திடீரென காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். ஆலந்தூர் தொகுதியில் உள்ள மக்களிடையே இவரது தொண்டால் பொழுதளந்த தூய்மையான சேவையின் காரணமாக அளவற்ற நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். ஆலந்தூர் நகராட்சிமன்ற உறுப்பினராகவும் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அந்த மக்களிடையே மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரின் அன்பையும், ஆதரவையும் மிகுதியாக பெற்றவர்.
காங்கிரஸ் தலைமை நடத்துகிற ஆர்பாட்டமோ, போராட்டமோ, பேரணியோ எதுவாக இருந்தாலும் அதற்கான அழைப்பு வந்தவுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தோழர்களுடன் மூவண்ணக் கொடியை கையில் ஏந்தி கம்பீரமாக முன்னின்று செயல்பட்ட தேசிய தளபதியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. சிலவற்றை ஈடு செய்ய முடியும். அனால் ஆற்றல் மிக்க தோழர் நாஞ்சில் பிரசாத் மறைவு ஈடு செய்யவே முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இதன்மூலம் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது.
திரு நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்மை விட்டு பிரிந்த திரு நாஞ்சில் பிரசாத் அவர்களது இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த தேசிய செயல்வீரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்