தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

By vinoth kumar  |  First Published Nov 24, 2022, 9:35 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 


பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அது வளர்ந்து வருகிறது என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் அதிமுகவில் உள்ள பிரச்சனைகளையும் அதில் சுட்டிக் காட்டி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அது வளர்ந்து வருகிறது. ஒன்று வளர்கிறது என்றால் ஏதோ ஒன்று தேய்கிறது என்றுதானே அர்த்தம். ஒன்று, திராவிட கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் இன்று திசை மாறி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் இல்லை. புதிய உறுப்பினராக இணையும் இளைஞர்கள் திராவிட  கட்சிகளை விட்டுவிட்டு வளரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகிறார்கள் என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் போது ஏதோ ஒரு பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது. 'அது எந்த கட்சியாக இருக்கும்' என்பதை தெரிந்து கொள்ளத்தான் இன்று மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க;- வெற்றியை நோக்கி நகரும் சீமான்.. வழிகாட்டும் முப்பாட்டன் முருகன்.. புளங்காகிதம் அடையும் ஜெ. உதவியாளர்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள் இணைந்தால்தான் வலிமையான கட்சியாக மாறும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைக்க காரணம், அவர்களுக்கு பதவி, பணத்தில் ஆசை இல்லை. முக்கியமாக அவர்களிடம் சுயநலம் இல்லை. கட்சியின் நலம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அப்படிப்பட்ட தொண்டர்கள் இனியும் வேடிக்கை பார்ப்பது என்பது கழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகத்தை தந்துவிடும். உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறதா? இப்போது நிலவும் சூழ்நிலைகள் அதிமுக-விற்கு வளர்ச்சியை தருமா? நடப்பவற்றை சீர்தூக்கி பார்த்து நீங்களே முடிவெடுங்கள். 

நிர்வாகிகளுக்கும் ஒன்றை இந்த நேரத்தில் நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். முதலில் உங்கள் சுயநலத்தை விடுங்கள். உங்களை வளர்த்த கட்சிக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவெடுங்கள். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் கட்சிக்கு எது நல்லதென்று! உங்கள் நண்பர்களிடம் புலம்பி கொண்டிருக்கிறீர்களே தவிர தலைவர்களிடம் எடுத்துச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள். தமிழகத்தில் இன்று யாரை எதிர்க்கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். தயவு செய்து கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு தலைவர்களோடு பேசுங்கள். உண்மை நிலை குறித்து எடுத்துச் சொல்லுங்கள். கட்சி இருக்கும் வரைதான் உங்களுக்கும் மதிப்பு இருக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள். 

தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.  எல்லோருடனும் நான் பயணித்திருக்கிறேன். எனவே எனக்கு கழகம் தான் முக்கியம். அம்மாவிடம் இருந்த போது பார்க்கும் பார்வையில் தான் இன்றும் உங்களைப் பார்க்கிறேன்.  இவர் வேண்டியவர், அவர் வேண்டியவர் என நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. இவர் அணி என்று ஒரு பிரிவினரும், அவர் அணி என்று ஒரு பிரிவினரும் பிரிந்து கிடக்கும் இச்சூழலில் சுய நலமில்லாமல்  கட்சியை ஒருங்கிணைக்கும் அணி என்ற ஒன்று உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒருங்கிணைக்கும் அணிக்கு என்னைத் தர நான் தயாராக இருக்கிறேன். அதற்கு உங்களைத் தர நீங்களும்  தயாராக வேண்டும் என்பதே எனது வேண்டுதல். அதுவே இதய தெய்வங்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கான காணிக்கை என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கொடுக்க என்ன தயக்கம்? ஜெ. உதவியாளரின் அரசியல் கணக்கு..!

click me!