ஜனவரியில் அரசியல் கட்சி... முடிவை அறிவித்தார் ரஜினி... ஆன்மீக அரசியல் உறுதியானது.

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 12:48 PM IST
Highlights

இப்போ இல்லன்னா..  எப்பவும் இல்ல.  வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம் நிகழும்..!!!  

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், டிசம்பர் 31 இல் அதற்கான தேதி அறிவிப்பு செய்யப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன்  நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு " நான் அரசியலுக்கு வருவது உறுதி"  என்று கூறி,  நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார் ரஜினி, அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலே தனது பிரதான இலக்கு எனவும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால் தர முடியும் என்றும் கூறி அதிரடி காட்டினார். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும் என அவரது  ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து தவமாய் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும், கொரோனா தொற்று காரணமாக அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டனர். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார்.  அவரின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசியல் நிலவரம், கொரோனா களப்பணி முதலியவை குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டிருந்தார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.  இதனால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக,  ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், மாற்றுவோம்... எல்லாத்தையும் மாற்றுவோம்... இப்போ இல்லன்னா..  எப்பவும் இல்ல.  வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம் நிகழும்..!!!  என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் அளவற்ற உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் வருகை கானல் நீராகி விட்டது என கூறி வந்தவர்களுக்கு அவரின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!