தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டு..!இபிஎஸ்க்கு செக் வைக்கும் பாஜக...! மோடியிடம் சரணடைகிறாரா எடப்பாடி?-ஜெகதீஸ்வரன்

By Ajmal KhanFirst Published Jul 22, 2022, 11:12 AM IST
Highlights

தமிழகத்தில் வருமான வரி சோதனை மற்றும் சிபிஐ கடிதம்  மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு,அதிமுக- பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் படு தோல்வி அடைந்தது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் முழுமையாக செல்வாக்கை இழந்த அதிமுக, கொங்கு மண்டலத்தில் மட்டும் வெற்றி பெற்றது. பாஜகவும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 90 சதவிகித இடங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். இந்த பரபரப்புக்கு மத்தியில் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க  எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

எடப்பாடிக்கு செக் வைத்த மத்திய அரசு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்லவுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் மறு பக்கத்தில் அவருக்கு தோல்விதான் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதில் முக்கியமான நிறுவனம்  ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தெரிவித்தார். இந்த நிறுவனம் அதிமுக ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான சாலைகள் போட டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.   திண்டுக்கல், நத்தம்,பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பத்தாயிரம் கோடிக்கு மேல் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாக கூறினார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிகளவு நிதி உதவி வழங்கிய நிறுவனத்தில் ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்சன் முக்கிய நிறுவனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தநிலையில் கடந்த 3 தினங்களாக அந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

2024 தேர்தலில் எல்லா தொகுதிகளும் அதிமுகவுக்குதான் .. எதிர்காலத்தில் இபிஎஸ்தான் முதல்வர்.. தங்கமணி தாறுமாறு!

விஜயபாஸ்கருக்கு நெருக்கடி

இதே போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையின் போது விஜயபாஸ்கர் வீட்டில் டைரி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த டைரியில்,  சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்காக அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில் தான் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறினார். இதே போல முன்னாள் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தெரிவித்தார். சிபிஐ தொடர் விசாரணை நடைபெற்றால் விரைவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம் எனவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்

மோடியை சந்திக்கும் இபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிட்காயின் அதிக அளவு முதலீடு செய்துள்ளதாகவும், தனி தீவில் இடம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறினார். எனவே மத்திய அரசுக்கு எதிராக பேசாமல் இருக்கும் போதே இவ்வளவு சோதனை என்றால் பாஜகவிற்கு எதிராக பேசினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிலை என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தால் கூட அதிமுக சார்பாக அறிக்கை கூட வராது எனவும் தெரிவித்தார். அதிமுக மடியில் கனம் உள்ளது எனவே அதிமுகவே நினைத்தாலும் பாஜகவை விட்டு வெளியே வர முடியாது என கூறினார். எனவே டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டாலும் மோடியிடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, வருமான வரித்துறை கொடுக்கும்  நெருக்கடி தொடர்பாக தங்களது கோரிக்கையை தெரிவித்து அவரிடம்  சரண்டைய வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை

 

click me!