ஏய், யார் நீ.. தள்ளிப்போ.. திமுக எம்எல்ஏ எழிலனை ஒருமையில் அழைத்து போலீஸ் அராஜகம் ..!

By vinoth kumarFirst Published May 17, 2021, 7:13 PM IST
Highlights

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலனை தலைமைச் செயலகத்தில் போலீஸ் ஒருவர் ஒருமையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலனை தலைமைச் செயலகத்தில் போலீஸ் ஒருவர் ஒருமையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் முயற்சிக்கு ஆலோசனை வழங்கி துணை நிற்க, முதல்வர் தலைமையில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நேற்று அரசு அறிவித்தது. அந்த குழுவில் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவருமான மருத்துவர் எழிலன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

குழுவில் நியமித்தமைக்கு நன்றி கூறவும், கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலகத்தில் மருத்துவர் எழிலன் இன்று மதியம் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பிற்கு பிறகு, முதல்வர் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட இருந்ததால் மருத்துவர் எழிலன் கீழ் தளத்தில் அவரை வழியனுப்ப  காத்திருந்தார்.

முதல்வரின் வாகனம் புறப்படும்போது வணக்கம் செலுத்துவதற்காக சென்ற மருத்துவர் எழிலனை, அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் கொடிலிங்கம்  "ஏய், யார் நீ.. தள்ளிப்போ" என்று ஒருமையில் பேசினார். சுற்றியிருந்தோர், "அவர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்" என்று கூறியதும் அமைதியானார்.

முதல்வருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த பிறகு, தன்னை ஒருமையில் அழைத்தது யார் என்று அங்கிருந்தவர்களை எழிலன் கேட்டார். "நான் தான் அழைத்தேன், சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாமல் அழைத்துவிட்டேன். எம்.எல்.ஏ கட்சி கர வேட்டி கட்டிகிட்டு வருவாங்க.. அப்புடிதான் நான் பார்த்திருக்கேன் ..." என்று காவல் துணை ஆய்வாளர் கொடிலிங்கம் பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் யாராக இருந்தாலும் மரியாதையாக அழைத்து பழகுங்கள், அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்று அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் மருத்துவர் எழிலன். ஆட்சி மாறிய பிறகும், அதிகார மட்டத்தில் இருக்கும் அதிமுக விசுவாசிகளின் ஆட்டம் குறையவில்லை என்று அங்கிருந்த திமுகவினர் வேதனை தெரிவித்தனர்.

click me!