தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.. சல்லடைபோட்டு தேடுகிறது தனிப்படை.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2021, 10:44 AM IST
Highlights

இந்நிலையில் அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஒரு தனிப்படை போலீசார் மதுரை சென்று அவரை தேடி வருகின்றனர், 

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரை கைது செய்ய 2 தனிப்படை போலீசார் மதுரையில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு  விசாரணைக்கு நடைபெற்று வந்தது. மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிட்டார். மேலும், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக காவல்துறை தெரிவிப்பது தவறானது எனவும் வாதிடப்பட்டது. தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம்  இருந்தால் தன்னை காவல்துறையினர் கைது செய்யட்டும் என தெரிவித்த மணிகண்டன் தரப்பு, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தன்னுடன் சாந்தினி வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படது.

மேலும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதால் தனக்கு  முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. காவல்துறை தரப்பில்,  விசாரனை தற்போது ஆரம்ப கட்டத்தில்  உள்ள நிலையில், சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று முறை சாந்தினி கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க  வேண்டியுள்ளதால் முன் ஜாமின் வழங்ககூடாது என வாதிடப்பட்டது. மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. சாந்தினி தரப்பில், தன்னை திருமணம் செய்து கொள்வதான தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 'திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சாந்தினி தரப்பு வழக்கறிஞர் முன் ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஒரு தனிப்படை போலீசார் மதுரை சென்று அவரை தேடி வருகின்றனர்,  மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனின் உறவினர் வீடு மதுரையில் இருப்பதால் அவர் அங்கு பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, இதனால் தனிப்படை போலீசார் மதுரையில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் அவரது மனைவி இருவரும் மதுரையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, அது தள்ளுபடி ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளார், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. 
 

click me!