
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 4 ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் வைரமுத்து இன்று செலுத்தினார். 8 லட்ச ரூபாய் அளவிற்கு அவர் சொத்துவரி செலுத்தியதால் சீல் வைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட்டனர். வைரமுத்துவின் இந்த காலதாமதத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சொத்துவரி என்பது நில உரிமையாளர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளூர் நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டிய ஆண்டு தொகையாகும். இது ஒவ்வொரு சொத்துக்கள் மீதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் புதிதாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை அனைவரிடமும் முறையாக வசூலிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை பல முக்கிய புள்ளிகள் அரசியல் பிரமுகர்கள் முறையாக செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆனால் அது யாராக இருந்தாலும் சரி இனி சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவர்களின் சொத்துக்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து நான்கு ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்த சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபம் பொன்மணி மாளிகை இயங்கி வருகிறது. அது 27 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த மண்டபத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வைரமுத்து சொத்து வரி செலுத்தவில்லை, கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் சொத்து வரி நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் அவர் சொத்துவரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாரிகள் அத்திருமண மண்டபத்திற்கு சீல் வைக்க வந்தனர். இந்த தகவல் வைரமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தொகையை மத்தியானத்திற்குள் செலுத்திவிடுவதாக அத்திருமண மண்டபத்தில் மேனேஜர் கூறினார். இந்நிலையில் அந்த தொகையை வைரமுத்து தரப்பிலிருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கை கைவிட்டனர். கடந்த 4 ஆண்டுகாலமாக வைரமுத்து சொத்து வரி கட்டுவதை தவிர்த்து வந்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை வைத்து பலரும் வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர். மேலும் , சொத்து வரி செலுத்தாமல் உள்ள பைலட் பென் மற்றும் பெனிசுலா hotel உள்ளிட்ட நான்கு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.