
ஆளுநர் உரையில் ஒரு புதிய அறிவிப்பு கூட இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை, ஆளுநர் உரைக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் வெற்று முழக்கங்களின் தொகுப்பாக உள்ளன. ஆளுநர் உரை என்பது வரும் ஆண்டில் அரசு செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான கொள்கை அறிவிப்புகளின் தொகுப்பாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், ஆளுநர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆளுநர் ஆற்றும் உரையில் முழுக்க முழுக்க முதல்வரின் புகழ் பாடும் வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். தம்மை ஜெயலலிதாவின் ஆண் வடிவமாக கருதிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையை தமது புகழ்பாடும் பாராட்டுப் பத்திரமாக தயாரித்து ஆளுநரிடம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். இத்தகையதொரு குப்பைக் கருத்துக்களை தம்மால் படிக்க முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுத்திருக்க வேண்டும். ஆனால், தமது அரசியல் சட்ட கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக எழுதிக்கொடுத்ததை அவர் படித்து விட்டு சென்றுள்ளார். ஆனால், ஆளுநர் உரையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புளங்காகிதம் அடைந்து கொள்வதைத் தவிர தமிழகத்திற்கும், மக்களுக்கும் எந்த பயனுமில்லை என்பதே உண்மை.
ஒக்கிப் புயலில் சிக்கி நடுக்கடலில் தவித்த மீனவர்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். உண்மையில் ஒரே ஒரு மீனவரைக் கூட மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றவில்லை. அனைத்து மீனவர்களையும் சக மீனவர்கள்தான் போராடி மீட்டனர். இத்தகைய சூழலில் மீனவர்களை தமிழக அரசு தான் மீட்டதாகக் கூறி பாராட்டுவது உண்மைக் கலப்பற்ற பொய் ஆகும். ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் 238 பேர் மீட்கப்படவில்லை. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களின் இறுதிச்சடங்கை குடும்பத்தினர் செய்து முடித்து விட்டனர். இத்தகைய சூழலில், அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை விடுத்து, கடைசி மீனவரை மீட்கும் வரையில் மீட்புப் பணியைத் தொடர அரசு உறுதிபூண்டிருப்பதாக ஆளுநர் கூறுவது குரூரமான நகைச்சுவையாகும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத்திட்டம் 2023-ஐ செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டிருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட அபத்தம் எதுவும் இருக்க முடியாது. இந்த திட்டத்திற்கான கால அவகாசம் 11 ஆண்டுகள் ஆகும். இதற்கான முதலீடு ரூ.15 லட்சம் கோடியாகும். திட்டம் அறிவிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரு விழுக்காடு தொகை கூட செலவிடப்படவில்லை. இதனால் திட்ட மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்து விட்ட நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வளவு தொகையை தமிழக அரசு எவ்வாறு முதலீடு செய்யப்போகிறது? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டில் ரூ.62,738 கோடி மதிப்பில் 61 தொழில் திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் 96,341 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயலாகும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.3636 கோடி மதிப்பிலான 7 பணிகள் செயல்படுத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றின் மூலம் 9775 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி அந்தத் திட்டங்களை 29.01.2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது தான் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. அதிமுக அரசின் பித்தலாட்ட அரசியலை முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள் அம்பலப்படுத்துகின்றன.
மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக்கூடிய மானியத்தின் உச்சவரம்பு 20,000 ரூபாயிலிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே இதற்கான அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டாகியும் இத்திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் அதற்கான மானியத்தை அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
உழவர்கள் நலனுக்காகவோ, மாணவர்கள் நலனுக்காகவோ, வேலைவாய்ப்பை பெருக்கவோ, வறட்சியைப் போக்கவோ எந்த திட்டமும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக அரசுக்கு தகுதியற்ற பாராட்டுகள் பொழியப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஆளுநர் உரைகள் பழைய மொந்தையில் புதிய கள்ளாக இருக்கும். ஆனால், இந்த ஆளுநர் உரை பழைய மொந்தையில் புளித்துப்போன கள்ளாக உள்ளது என ஆளுநர் உரையை ராமதாஸ் விமர்சித்துள்ளார்.