நான் அடுத்த போராட்டத்தை அறிவிப்பதற்குள் ஸ்டாலின் அவர்களே ஆந்திர முதல்வரிடம் பேசுங்கள்.. கெடு வைத்த அன்புமணி.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 5:36 PM IST
Highlights

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு இரண்டு அணைகளை கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளுர்மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு இரண்டு அணைகளை கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளுர்மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார் விவரம் பின்வருமாறு:- 

ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது, கத்திரிப்பள்ளி என்ற இடத்தில் 540 ஏக்கர் பரப்பளவில் 92 கோடி மதிப்பீட்டில் ஒரு அணையும், மொக்கோலா கண்டிகை எனும் இடத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் 72 கோடி மதிப்பீட்டில் ஒரு அணை என இரண்டு அணைகளை ஆந்திர மாநில அரசு கட்டுகிறது. இந்த இரண்டு அணைகளையும் ஆந்திர அரசு கட்டி விட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கொசஸ்தலை ஆற்றில் வந்து சேராது. 

இதே போன்ற ஒரு திட்டத்திற்காக தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவின் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகளை கட்டுவதற்காக திட்டமிட்டு அவர் அறிவித்திருந்தார். அதனை எதிர்த்து முதல் குரலை தெரிவித்தவர் இந்த அன்புமணி ராமதாஸ் தான். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் இதே பள்ளிப்பட்டில், இதே இடத்தில் நாம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சிகளும் அறிக்கையை வெளியிட்டார்கள். பாமகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக ஆந்திர அரசு திட்டத்தை கைவிட்டது. 

கொசஸ்தலை ஆறு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கினாலும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்கு வந்து பல நூறு ஏரிகளை நிரப்பி விட்டு, சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியினை  நிரப்பிவிட்டு, சென்னை எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பகுதிகள் கொசஸ்தலை ஆற்றின் காரணமாகவே செழிப்பாக இருக்கின்றன. ஆனால் ஆந்திராவில் இந்த அணைகள் கட்டிவிட்டால், குடிநீர் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும். 

இதையும் படியுங்கள்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா தீபா.?? மருத்துவமனையில் ஜெ அண்ணன் மகள்.. பரபரக்கும் தகவல்.

ஆந்திர அரசு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. சட்டம் என்ன சொல்கிறது என்றால்,  ஒரு நீர் நிலையில் முதல் மடை மாநிலம் அணைகளை கட்ட வேண்டும் என்றால், கடைநிலை மாநிலத்தின் அனுமதிகளை பெற்று தான் கட்ட வேண்டும். ஆனால் ஆந்திர அரசு தமிழகத்தின் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தினை அறிவித்து இருக்கிறது.

கொசஸ்தலை ஆற்று படுகை என்பது 3,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 3800 சதுர கிலோமீட்டர் பரப்பில் 3000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தமிழகத்தில் இருக்கிறது. 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே ஆந்திரவில் இருக்கிறது. 75% தமிழகத்தில் இருக்கிறது 25% மட்டும் தான் ஆந்திராவில் இருக்கிறது. நம்முடைய கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட அவர்களுக்கு உரிமை கிடையாது.  இது எங்கள் வாழ்வுரிமை. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அணை கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. 

அதனை எதிர்த்து தான் முதற்கட்டமாக இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு, ஆந்திர அரசை தடுப்பணை கட்டுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆந்திராவிற்கு சென்று ஆந்திர முதலமைச்சரை சந்தித்து இந்த திட்டத்தினை தடுத்து நிறுத்த வேண்டும். 

ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், இது மிக முக்கிய பிரச்சனை, ஒரு காலகட்டத்தில் பாலாறு பால் போன்ற ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இன்று பாலைவனமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் யார்? இதே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை ஆந்திராவில் கட்டியதன் விளைவு, இன்று தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை. பாலைவனமாக காட்சியளிக்கிறது. இந்த நிலை கொசஸ்தலை ஆற்றுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் உணர்வுபூர்வமாக இந்த ஆர்பாட்டடத்தினை நாங்கள் நடத்துகிறோம்.

இதையும் படியுங்கள்: பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் எப்போதும் முரட்டுத்தனமாக தான் இருப்பார்கள்.. அதுதான் என் வேலை, அண்ணாமலை பகீர்.

அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களுக்கு இதைப் பற்றி தெரியாது. பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் இதனை பற்றி பேசும். பாட்டாளி மக்கள் கட்சி மையக் கொள்கையே, விவசாயிகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்றவைகள் தான். தமிழகத்தில் எங்கே பாதிக்கப்பட்டாலும் அங்கே முதல் நாளாக அன்புமணி ராமதாஸ் இருப்பார். குறிப்பாக விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் ஓடோடி சென்று போராட்டங்களை நடத்தி விவசாயிகளின் உரிமையை மீட்டுக் கொடுப்பவன் இந்த அன்புமணி ராமதாஸ். 

எங்களை எல்லாம் வழிநடத்தும் மருத்துவர் அய்யா அவர்கள் அடிப்படையில் விவசாயி. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விவசாயிகளை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம். இந்த பிரச்சனை என்பது ஒட்டுமொத்த திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் பிரச்சனை. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், குடி தண்ணீர் இருக்காது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். 

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பூண்டி ஏரிக்கே  கொசஸ்தலை ஆறுதான் தண்ணீர் கொடுத்து கொண்டிருக்கிறது. ஆந்திரா அணை கட்டிவிட்டால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசே விழித்துக்கொள், ஆந்திரா அணை கட்டிவிட்டால் சென்னைக்கு குடிநீர் கிடைக்காது. 

அதனால் உடனடியாக இந்த அணைகளை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதற்கட்டமாக இந்த  ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.  இன்னும் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்ட போராட்டத்தினை நாங்கள் அறிவிப்போம். அதற்கு முன்னதாக தமிழக அரசு, ஆந்திர அரசிடம் பேசி வலியுறுத்தி இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என அன்புமணி பேசினார்.
 

click me!