தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இழந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகள் அங்கீகாரம்
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து அந்த அந்த கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். குறிப்பாக தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் 2 சதவீத சீட்டுகளை பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெறும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். அதே போல மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
அங்கீகாரத்தை சிபிஐ
இந்த நிலையில் இந்திய அளவில் வாக்குகள் மற்றும் எம்பி மற்றும் எம்எல்ஏ பதவிகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கான ஆங்கீகாரத்தை பறித்தும், அங்கீகாரம் வழங்கியும் உள்ளது. அந்தவகையில் தேசிய கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய அங்கீகாரத்தை இழந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் குறைவாக வாக்குகளை பெற்றதும், எம்பிகளை இழந்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதே போல மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேசிய அங்கீகாரத்தை இழந்துள்ளது. இதே போல தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் அங்கீகாரத்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில கட்சி அங்கீகாரம்
அதே நேரத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆளும்கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மாநில கட்சி என்று பார்க்கும் போது உத்தரப்பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பிஆர்எஸ், மணிப்பூரில் பிடிஏ, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.பி, மிசோரத்தில் எம்பிசி ஆகிய கட்சிகள் மாநில அந்தஸ்தை இழந்து உள்ளன. தமிழகத்தில் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொண்ட பாமக, புதுச்சேரி மாநிலத்தில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
மாம்பழம் சின்னம் இழப்பு
இதன் காரணமாக புதுவை தேர்தலில் பாமகவிற்கு மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் தற்போது 6 தேசிய கட்சிகளே உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சிகளுடன் தற்போது புதிதாக ஆம் ஆத்மி கட்சி இந்த வரிசையில் இணைந்து உள்ளது.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் அணி மாநாட்டில் டிடிவி. தினகரன்? செய்தியாளர்கள் கேள்விக்கு அவரே கொடுத்த பரபரப்பு தகவல்..!