பத்து வருடமா மத்திய ஆட்சியில் பாமக அங்கம் வகிக்கல.. அதனால் இது நடக்கல.. டாக்டர் ராமதாஸ் சொன்ன ஃபிளாஷ்பேக்.!

By Asianet TamilFirst Published Jun 6, 2021, 9:36 PM IST
Highlights

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பாமக அங்கம் வகிக்காததால் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தின் மூத்த மொழியான தமிழை இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்கிவிட வேண்டும் என்பதற்காக பாமக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. 1998ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தமிழ்நாட்டிலிருந்து அதிமுக, பா.ம.க., மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தேன்.பிரதமர் வாஜ்பாயை சந்திக்கும் போதெல்லாம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
ஒரு கட்டத்தில் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சிமொழி மாநாட்டை டெல்லியில் நடத்த தீர்மானித்தேன். அதன்படி, 19.11.1998 அன்று ஆட்சிமொழி மாநாட்டை நடத்தினேன். அந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை, அப்போது எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றிருந்த அஸ்ஸாமி, ஹிந்தி, உருது, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கனி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, மணிபூரி, மலையாளம், மராத்தி, வங்க மொழி ஆகிய 18 மொழிகளிலும் அச்சிடப்பட்டிருந்தது. 18 மொழிகளிலும் தனித்தனி அழைப்பிதழ்கள் அச்சிடப்படாமல் ஒரே அழைப்பிதழில் 18 மொழிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
மாநாட்டு அழைப்பிதழை பிரதமர் வாஜ்பாயிடம் நானும், பாமக மூத்தத் தலைவர்களும் சந்தித்து கொடுத்தபோது 18 மொழிகளில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தார். தமது வாழ்நாளில் இப்படியொரு பிரம்மாண்டமான அழைப்பிதழை பார்த்ததில்லை என்று வாஜ்பாய் பிரம்மிப்புடன் தெரிவித்தார்.   தமிழை ஆட்சிமொழியாக்குவதற்காக செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து என்னுடன் விரிவாக அவர் விவாதித்தார். தமது ஆட்சிக்காலத்திற்குள் தமிழை ஆட்சிமொழியாக்குவதாக உறுதி அளித்தார். அதேபோல், மாநாட்டில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 13 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என வலியுறுத்தினர். 
அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் வாஜ்பாய், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை 2003ஆம் ஆண்டில் வாஜ்பாய் அமைத்தார்.  எனினும், அதன் பின் வந்த அரசுகள் ஆர்வம் காட்டாததாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பாமக அங்கம் வகிக்காததாலும், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கனவு இன்னும் நனவாகவில்லை.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!