மக்களுக்காகவே உயிரை விடுவேன்...!! பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 24, 2019, 8:22 AM IST
Highlights

‘‘பாட்டாளி மக்கள் கட்சிக்கு நாம் வெற்றியைத் தராமலேயே அவர்கள் நமக்காக இவ்வாறு களமிறங்கி போராடுகிறார்களே.... அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஏதேனும் ஒரு வெற்றியைக் கொடுத்து விட்டு, இன்னும் கூடுதலாக நமக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் என்ன?’’ என்ற சிந்தனை நமது மக்கள் மத்தியில் எப்போது ஏற்படுகிறதோ, அப்போதே தமிழகம் வல்லரசாகி விடும்.

அங்கீகாரம் தான் அதிகாரத்தை வென்றெடுக்கும் ஆயுதம் என்றும், மக்களுக்காக போராடும் பாட்டளி மக்கள் கட்சிக்கு ஏன் இதுவரை அங்கிகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள் என்றும் மக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அதன் நிறுவனர் ராமதாஸ்,  என்னை எவ்வளவு வாட்டினாலும் மக்களுக்காகவே உழைத்து உயிரைவிடுவேன் என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார் அதன் முழு விவரம் :- 

அகில இந்திய அரசியல் அரங்கில் அடிக்கடி செய்யப்படும் ஒப்பீடு பாட்டாளி மக்கள் கட்சி- சிவசேனை கட்சி பற்றியது தான். அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு.  சிவசேனை கட்சி மராட்டிய மக்களின் மண் உரிமைகளை பாதுகாப்பதற்காக 1966-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை முறையாக வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட சமூக நீதிக் கட்சியாகும்.சிவசேனா கட்சியின் நிறுவனராகிய பால் தாக்கரேவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராகிய நானும் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. இரு கட்சிகளுமே உரிமைகளுக்காக போராடும் கட்சிகள் ஆகும். ஆனாலும், இரு கட்சிகளுக்கும் முறையே அந்தந்த மாநிலங்களில் கிடைத்துள்ள அங்கீகாரம் என்பது வேறு வேறானவை.

2 லட்சத்திலிருந்து ஒரு கோடிக்கு!மராட்டிய மாநிலத்தில் நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா குறைந்தது 105 முதல் 110 இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் கணித்திருக்கின்றன. 1971-ஆம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலில் 2 லட்சத்து 27,468 வாக்குகளை மட்டுமே பெற்ற சிவசேனா கட்சி, கடைசியாக தனித்து போட்டியிட்ட 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.02 கோடி வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவானது.

பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது 13 லட்சம் வாக்குகளைப் பெற்றது. கடைசியாக தனித்துப் போட்டியிட்ட 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதைவிட  சுமார் இரு மடங்கு அளவுக்கு  25 லட்சம் வாக்குகளை வென்றிருக்கிறது. சிவசேனா கட்சி பாரதிய ஜனதா ஆதரவுடன் 1995-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து 5 ஆண்டுகள்  முழுமையாக ஆட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி 2001 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது தான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு  மிகப்பெரிய வெற்றியாகும்.

மராட்டியத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கூட்டணியின் அங்கமாக உருவெடுக்கப் போகிறது. பாட்டாளி  மக்கள் கட்சியும் தமிழகத்தில் அப்படி ஒரு நிலைக்கு உயர வேண்டும் என்பது தான் நமது விருப்பம் ஆகும்.கொள்கை நமதுடைமை கொள்கை என்று பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் முன் நிற்கும் தகுதி சிவசேனாவுக்கு கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை 29 நிழல் நிதிநிலை அறிக்கைகள் உள்ளிட்ட 43 ஆவணங்களை வெளியிட்டுள்ளது.  இதில் சமூகநீதி, பொருளாதாரம், நகர்ப்புற கட்டமைப்பு, மதுவிலக்கு,  வரி சீர்திருத்தம், நகர்ப்புற போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த ஆவணங்களும் அடக்கம் ஆகும்.

ஆனால், சிவசேனா கட்சி இத்தகைய ஆவணங்கள் எதையும் வெளியிட்டதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவன் நான். அதன்பிறகும் கூட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டையும், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%. 7.5% இட ஒதுக்கீட்டையும் பெற்றுக் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆனால், சிவசேனா கட்சி மக்களுக்காக எந்த உரிமையையும் வென்று கொடுத்ததில்லை. சிவசேனாவின் முழக்கம் சிவசேனா கட்சியின் ஒற்றை மந்திரம் ‘‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’’என்ற முழக்கம் தான்.பாட்டாளி மக்கள் கட்சி வெறுப்பு அரசியல் செய்யும் கட்சி அல்ல. அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும்.
ஆனால், சிவசேனா கட்சியோ, மும்பையில் மராட்டியர்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை என்று முழங்கி வெறுப்பரசியலை முன்னெடுக்கிறது. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக 1970, 1974, 1992&93 என மூன்று முறை வன்முறை வெறியாட்டங்களை நடத்தி, எதிரிகளை கொலை செய்த கொடூரக் கட்சி சிவசேனா ஆகும்.

எந்த சாதகமும் இல்லாமை, ஏராளமான பாதகங்களை வைத்துக் கொண்டு மராட்டியத்தின் ஆளுங்கட்சி என்ற நிலை வரை உயர்ந்துள்ளது சிவசேனா.ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை ஆனால், எல்லாத் தகுதியும் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் அரசியலில் இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் யார்? தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெளிவு ஏற்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து திராவிடக் கட்சிகள் படைத்த சாதனைகளை விட, ஆட்சிக்கு வராமல் பாட்டாளி மக்கள் கட்சி படைத்த சாதனைகள் அதிகம். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்னும் மக்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே?

மக்களுக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் கொடி பிடித்து போராட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால், தேர்தல், ஆட்சி என்று வரும் போது மட்டும் பொருளாதார வலிமை மிக்க கட்சிகளைத் தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இது என்ன நியாயம்? கிராமப்புற பழமொழி கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ‘‘ வேலை செய்பவனுக்கு வேலையைக் கொடு..... வேலை செய்யாமல் ஏய்ப்பவனுக்கு கூலியைக் கொடு’’ என்பது தான் அந்த பழமொழி. தமிழக அரசியலுக்கு இந்த பழமொழி தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் போலிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவார்கள்;  சாதித்துக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நமக்கு போராடும் வேலையை மட்டும் தான் மக்கள்  தருகிறார்கள். 

ஆனால், மக்களுக்காக எதையும் செய்யாதவர்களுக்கு வெற்றியைத் தருகிறார்கள்.‘‘பாட்டாளி மக்கள் கட்சிக்கு நாம் வெற்றியைத் தராமலேயே அவர்கள் நமக்காக இவ்வாறு களமிறங்கி போராடுகிறார்களே.... அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஏதேனும் ஒரு வெற்றியைக் கொடுத்து விட்டு, இன்னும் கூடுதலாக நமக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் என்ன?’’ என்ற சிந்தனை நமது மக்கள் மத்தியில் எப்போது ஏற்படுகிறதோ, அப்போதே தமிழகம் வல்லரசாகி விடும். உழைக்கும் கட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பது தானே அதற்கு உத்வேகத்தைக் கொடுக்கும். 

பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்து, அதிகாரத்தில் அமர்த்திப் பாருங்களேன் தமிழக மக்களே.... உங்கள் நிலைமை உயரங்களுக்கு செல்லும். மற்றபடி.... பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பணி இன்றைக்குப் போலவே என்றைக்கும் தொடரும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று....முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும்,  கோல் ஊன்றி நடந்தாலும் இந்த ஊமை ஜனங்களுக்காகவும், மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன்!

click me!