முதல்வரை தவிர எல்லோரையும் துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள்... கர்நாடக பாஜகவுக்கு குண்டக்க மண்டக்க யோசனை கொடுத்த டாக்டர் ராமதாஸ்!

By Asianet TamilFirst Published Aug 28, 2019, 9:03 PM IST
Highlights

ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் பெல்லாரியில் நடுரோட்டில் டயர்களை எரித்தும் போராட்டம் நடத்தினர். உச்சகட்டமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
 

கர்நாடகாவில் ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் சோ காட்டிய வழியில் முதல்வரை தவிர மற்ற அனைவரும் துணை முதல்வர் என்று அறிவித்து விட வேண்டியது தானே என்று கூட்டணி கட்சியான பாஜகவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலாய்த்துள்ளார்.


குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா அமைச்சர்களை நியமிக்கவே ஒரு மாதம் எடுத்துக்கொண்டார். ஒரு வழியாக அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அந்தப் பிரச்னையே இன்னும் முடிவடையாத நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 3 துணை முதல்வர்களை எடியூரப்பா நியமித்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்த் கார்ஜோல், புதியவர்களான லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதனால் மூத்த அமைச்சர்கள் ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு போன்றோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் இவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முன்பு முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரான நிலையில் அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவில்லை. தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே ஜெகதீஷ் ஷெட்டர் வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே பாஜக ஆட்சியில் முன்னாள் துணை முதல்வர்களாக இருந்த ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோருக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருந்துவருகிறார்கள்.


இதற்கிடையே ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் பெல்லாரியில் நடுரோட்டில் டயர்களை எரித்தும் போராட்டம் நடத்தினர். உச்சகட்டமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த முதல்வர் எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜகவின் செயல்பாடுகளைக் கலாய்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகத்தில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் துணை முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி: செய்தி - இதிலென்ன பிரச்சினை... முகமது பின் துக்ளக் படத்தில் சோ காட்டிய வழியில் முதலமைச்சரை தவிர மற்ற அனைவரும் துணை முதலமைச்சர் என்று அறிவித்து விட வேண்டியது தானே!” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!