போக்குவரத்துத்துறை தனியார் மயமா? தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.. திமுகவை எதிர்க்கும் ராமதாஸ்

By Raghupati RFirst Published Aug 7, 2022, 4:16 PM IST
Highlights

‘சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாதது’ என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாகத் தனியார்மயமாக்கத் தமிழ்நாடு அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. 

மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாதது. உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு கடந்த 06.12.2021 அன்று கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி சென்னையில் போக்குவரத்து சேவை, நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.12,000 கடன் வழங்கும். 

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

இத்திட்டத்தின் ஓர் அங்கமாகச் சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும். புதிய பேருந்துகளைத் தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர், நடத்துநர்கள் தான் இயக்குவர். 

அவற்றுக்கு மாதம் ஒரு தொகையைப் போக்குவரத்துக் கழகம் வாடகையாகச் செலுத்தும். இந்த முறைப்படி 2022-ஆம் ஆண்டில் 500 பேருந்துகளையும், 2024-ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளையும் இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதைத் தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை. 

முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தகட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். அத்தகைய சூழலில் அந்த பேருந்துகளுக்கான ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். 

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும். மேலும், தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, இனி வரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது. புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும். மொத்த செலவு ஒப்பந்த முறையைச் செயல்படுத்துவதன் மூலம் புதிய பேருந்துகள், அவற்றுக்கான உதிரிப் பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது. ஊதிய செலவுகள் குறையும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது.  

தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதைத் தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும்.  போக்குவரத்துக் கழகங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!