அவர்கள் வெளியிட்ட ஆபாச வீடியோவை ஷேர் பண்ணாதீங்க.... அதுவும் குற்றம் தான்! கட்சியினருக்கு அட்வைஸ் பண்ணும் பாமக!!

By sathish kFirst Published May 2, 2019, 2:24 PM IST
Highlights

அவர்கள் வெளியிட்ட ஆபாச வீடியோவை பின்னூட்டமாக பதிவிட வேண்டாம். அவ்வாறு பதிவிட்டால், அதுவும் குற்றம் தான் "மிக முக்கிய வேண்டுகோள்: அனைத்து விதமான வெறுப்பு பேச்சுகளையும் முற்றிலுமாக கைவிடுங்கள்!"

அவர்கள் வெளியிட்ட ஆபாச வீடியோவை பின்னூட்டமாக பதிவிட வேண்டாம். அவ்வாறு பதிவிட்டால், அதுவும் குற்றம் தான் என பாமக அறிக்கை வெளியிட்டுள்ளது. வேண்டாம் வெறுப்பு! (STOP HATE!) என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் அருள் தனது முகநூல் பதில்,  பொன்பரப்பி நிகழ்வு தொடர்பாக வன்னியர்கள் குறித்து பொய்யாகவும் மிகைப்படுத்தியும் ஊடகங்கள் தவறான தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்கியதால், படத்தில் உள்ளவர்கள் வன்னியர்களை இழிவாக பேசி காணொலி வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரப்பினர். இந்த மோசமான வெறுப்புக் குற்றத்திற்காக இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (ஓரிருவர் இன்னும் கைதாகவில்லை).

இப்பட்டியலில் முதல் வரிசையில் உள்ள விசிகவினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பொன்பரப்பி நிகழ்வுக்கு பிறகு, இதுபோல ஆபாசமாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், பெண்களை இழிவு செய்தும், சமூகத்தை கொச்சைப்படுத்தியும் காணொலி வெளியிட்ட வேறு யாராவது இப்பட்டியலில் விடுபட்டிருந்தால், அல்லது இன்னமும் கைது செய்யப்படாமல் வெளியில் இருந்தால் - அது குறித்த விவரங்களை அளிக்க கேட்டுக்கொள்கிறோம் (அவர்கள் வெளியிட்ட ஆபாச வீடியோவை பின்னூட்டமாக பதிவிட வேண்டாம். அவ்வாறு பதிவிட்டால், அதுவும் குற்றம் தான்)

"மிக முக்கிய வேண்டுகோள்: அனைத்து விதமான வெறுப்பு பேச்சுகளையும் முற்றிலுமாக கைவிடுங்கள்!"

அனைத்து விதமான இன வெறுப்பு கருத்துகளையும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கிறது.

மனிதர்கள் பலவிதமான அடையாளங்களுடன் வாழ்வது இயல்பானது. மதம், இனம், மொழி, சாதி, வாழும் பகுதி என பல வழிகளிலும் மக்களை குழுவாக பிரித்து அடையாளப்படுத்த முடியும். ஒவ்வொரு குழுவுக்கு என்றும் தனித்தன்மைகளும், பண்பாட்டு அடையாளங்களும் இருக்கும். அவற்றை ஒவ்வொரு குழுவும் பெருமிதமாகவும், உயர்வாகவும் கருதுவது இயல்பானதே! அதே நேரத்தில், தான் சராத மற்ற எந்தவொரு குழுவினரையும் குறைத்து பேசுவதையோ, இழிவுபடுத்துவதையோ பாமக எதிர்க்கிறது.

என்னுடைய மதம் உயர்வானது என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், 'காசுக்காக மதம் மாறியவர்கள்' என்று இன்னொரு மதத்தை இழிவு செய்யக்கூடாது. என்னுடைய மொழி மேலானது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், 'வந்தேறியவர்கள்' என்று இன்னொரு மொழி பேசுவோரை கொச்சைப்படுத்தக் கூடாது. என்னுடைய சாதி எனக்கு உயர்வானதாக இருக்கலாம். அதற்காக, 'மற்றசாதிகள் இழிவானவை' என்பது ஏற்கமுடியாத கருத்து.

1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் ஏற்றுக்கொள்ளும் புதிய யுகத்திற்குள் நுழைந்துவிட்டோம். இந்த புதிய நாட்டில் அனைவரும் சமமானவர்கள். மக்களின் அனைத்து பிரிவுகளும் சமமானவை என்பதை நாம் ஏற்கிறோம். உண்மையில், அத்தகைய ஒரு சமத்துவ நிலையை தமிழ்நாட்டில் கட்டமைக்கவே பாமக பாடுபடுகிறது.

'அரசியல் அதிகாரம், பொருளாதாரம், கல்வி அறிவு' என எல்லாவற்றிலும் எல்லா பிரிவினரும் சரிசமமான நிலையை எட்டுகிற காலம் இந்த உலகில் வரவே வராது. ஆனால், அத்தகைய ஒரு சமநிலையை நோக்கி செல்வதற்கான முயற்சிகளை முடிந்தவரை மேற்கொள்வது அரசியல் அமைப்புகளின் கடமை ஆகும். குறிப்பாக, அனைத்து மக்கள் பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை உறுதி செய்வதும், அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதும் அவசியம் ஆகும்.

"வெறுப்பு அரசியலுக்கு சமூகநீதி தான் மாற்று!"

# "இந்துக்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள். மற்ற மதத்தினர் இரண்டாம் தர குடிமக்கள்" என்கிற கருத்தினை பாமக முற்றிலுமாக நிராகரிக்கிறது.

# "தமிழர்கள் தான் இந்த நாட்டில் முழு உரிமை பெற்றவர்கள். இங்கேயே பலநூறாண்டுகளாக வசிக்கும் மற்ற மொழியினர் இரண்டாம் தர குடிமக்கள்" என்கிற கருத்தினையும் பாமக முற்றிலுமாக நிராகரிக்கிறது.

# "இந்த சாதிகள் ஆளப்பிறந்தவை. மற்ற சாதிகள் எல்லாம் அடிமை சாதிகள்" என்கிற கருத்தினையும் பாமக ஏற்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை.

- இது போன்ற அனைத்து குழு மோதல்களுக்கும் - சமூகநீதி என்கிற கோட்பாட்டையே பாமக தீர்வாக வைக்கிறது.

எல்லா குழுவினருக்கும் சம உரிமை வேண்டும். எல்லா குழுவினரின் மனித உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். பயத்திலிருந்து விடுதலை (Freedom from Fear), தேவைகளில் இருந்து விடுதலை (Freedom from want) என்கிற நிலையை எல்லா குழுக்களும் அடைய வேண்டும். 

அதே நேரத்தில் - அதிகாரத்தையும், வாய்ப்புகளையும், வளங்களையும் பகிர்ந்துகொள்வதில் - அந்தந்த குழுவின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார பங்கீடு வேண்டும். தமிழகம் என்கிற நிலப்பரப்பை சார்ந்த அனைத்து குழுவினரும் அவரவர் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப அனைத்தையும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

"தனிமனித வெறுப்புக் கருத்துக்கு அவர் சார்ந்த குழுவை திட்டாதீர்!:"

தனிப்பட்ட சாதி, மத, மொழி, இன வெறுப்புகளை எந்த சூழலிலும் வெளிப்படுத்தக் கூடாது. அத்தகைய வெறுப்பு கருத்துக்களை நமது சிந்தனையில் இருந்தே நீக்கிவிட வேண்டும்.

நமக்கு எதிரான வெறுப்பு கருத்துகளை ஒருவர் வெளிப்படுத்தினால் - அந்த தனி நபர்தான் குற்றவாளியே தவிர, அவர் சார்ந்த சமூகம் குற்றவாளி இல்லை. நாம் நமது கண்டனத்தை தனிநபருக்கு தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, சாதி, மதம், மொழி, இனத்தை அவதூறு செய்யக் கூடாது.

எந்தவொரு சாதி, மத, மொழி நிந்தனை கருத்தினையும் - அந்த வெறுப்பினை வெளிப்படுத்தும் தனிமனிதரின் கருத்தாக பார்க்காமல் - அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு, அவர் சார்ந்த ஒட்டுமொத்த சாதி, மத, மொழியை ஒருபோதும் இழிவு செய்யக் கூடாது என்பதே நமது நிலைப்பாடு ஆகும்.

எனவே, அனைத்து விதமான வெறுப்பு பேச்சுகளையும் முற்றிலுமாக கைவிடுங்கள்! என இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.

click me!