7 தொகுதிகளில் உதயசூரியன் - மாம்பழம் போட்டி... திமுகவை சமாளிக்குமா பாமக..?

By Asianet TamilFirst Published Mar 17, 2019, 2:33 PM IST
Highlights

பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தை எதிர்த்து போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 
 

கடந்த ஜனவரியில் மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்த பாமக, திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனுமே ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக, பாமக இழுத்த இழுப்புக்கு வளைந்துகொடுத்தது. அதன் காரணமாக 7+1 என்று தொகுதிகளை அதிமுகவிடமிருந்து பாமக பெற்றது. அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்த உடனே அக்கட்சியைக் கடுமையாக தாக்கி பேச ஆரம்பித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கட்சி பத்திரிகையிலும் மானாவாரியாக பாமகவை விமர்சித்தது திமுக.
இதற்கிடையே திமுக சார்பில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் கணிசமாக திமுக களமிறங்கியிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக கணிசமாக வெற்றி பெற்றதால், மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறும் முயற்சியாக வட மாவட்டங்களில் தனி கவனம் செலுத்திவருகிறது. மேலும் பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்தவும் திமுக சிறப்பு கவனம் செலுத்திவருகிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அரக்கோணம், , கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய 7 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, கடலூர், திண்டுக்கல், அரக்கோணம் ஆகிய 6 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகிறது. எனவே இரு கட்சிகளும் 6 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் சூழல் ஏற்பட்டிருந்தது. 
திடீர் அரசியல் நகர்வாக திமுக கூட்டணியில் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என திருமாவளவன் அறிவித்தார். இதன் மூலம் விழுப்புரத்தில் பாமக - விசிக போட்டி என்பது மாம்பழம் - உதயசூரியன் என்று மாறியுள்ளது. இதனால் 7 தொகுதிகளிலுமே திமுகவை எதிர்த்து போட்டியிட வேண்டிய  நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பாமகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் வேல்முருகன், பாரிவேந்தர் ஆகியோர் திமுக கூட்டணியில் உள்ளனர். இன்னொரு புறம் பாமகவுக்கு குடைச்சல் கொடுக்க காடுவெட்டி குரு குடும்பத்தினரும் முயற்சி செய்துவருகிறார்கள். மேலும் பாமகவை 7 தொகுதிகளிலும் வீழ்த்த வேண்டும் என்று திமுகவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த சூழ்நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி திமுகவுடன் பெரும் மல்லுக்கட்டு செய்ய வேண்டியிருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது!

click me!